பெற்றோரின் பெருமை 11

பள்ளி முடிந்து வீட்டிற்குள் நுழைந்த 15 வயதுள்ள குமார் என்ற பிள்ளை சோகமாக அமர்ந்திருக்கும் தன் அம்மாவை பார்த்து அம்மா. . . என்னாச்சி? ஏன் ஒரு மாதிரியாக இருக்கிறது உங்கள் முகம் என்கிறான். அதற்கந்த அம்மா பதிலளிக்கிறார் ஆம் பக்கத்து வீட்டு ரவிக்கு சைக்கிளில் செல்லும் போது கார் மோதி மிகுந்த காயத்துடன் ஆஸ்பத்திரியில் இருக்கிறானாம். உனக்காக தான் காத்துக்கிட்டிருந்தேன் என்றார். இதைக்கேட்ட குமார் மிகுந்த சந்தோஷத்துடன் உரத்த குரலில் அம்மா. . . ! அவனுக்கு அப்படி தான் ஆகனும் இதை நான் எதிர்பார்த்தது தான் என்றான். ஏனென்றால் இரண்டு நாட்களுக்கு முன் என் மீது இடித்திருக்க வேண்டியது அப்போதே அவனிடம் நான் கூறினேன் ஒழுங்காக ஓட்டுடா என்று. அதற்கவன் என்னிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டான். அப்போது கோபத்துடன் கூறினேன் கூடிய சீக்கிரம் உனக்கு விபத்து ஏற்படுமென்று இன்று நடந்து விட்டதென்று கூறிய உற்சாகம் நிறைந்த குமாரை அவனின் அம்மா மிகுந்த கவலையுடன் அவனருகில் நெருங்கி குமார். . . ! இப்படி பேசக்கூடாது மற்றும் இதைத்தான் எதிர் பார்த்தேன் என்று கூறுவதும் தவறு. ஆனால் நீ அவனை எச்சரித்தது சரி அதாவது நீ வண்டியை ஒழுங்காக ஓட்டு என்றதும் இல்லையேல் விபத்து ஏற்படுமென்று அச்சுறுத்தியதும் சரிதான். ஆனால் அப்போது அவனிருந்த சூழ்நிலையில் உன் அறிவுரையை ஏற்க மறுத்திருக்கலாம் ஆனால் இன்று அந்த எச்சரிக்கை அவன் மனதில் பதிந்திருக்கும் ஆணித்தரமாக மற்றும் இனி மற்றவர்களுக்கும் அவன் அறிவுரை கூறும் அளவிற்கு பதிந்திருக்கும். அதனால் தான் மற்றவர்கள் நம்முடைய நல்ல அறிவுரையை ஏற்றுகொள்கிறார்களோ இல்லையோ நமது கடமை கூறுவது மட்டுமே அவர்களுக்கென்று ஒரு சந்தர்ப்பம் வரும்போது அவர்களை அறியாமலேயே எப்போதோ கேள்விப்பட்டதை ஏற்றுக்கொள்வார்கள் இதுவும் பகுத்தறிவு வளர்ச்சியின் ஒரு கட்டமாகும். இதற்கு ஒரு சில உதாரணங்களை என்னில் ஏற்பட்டதை உன்னிடம் கூறுகிறேன் என்றார் குமாரின் அம்மா. நாம் இப்போதிருக்கும் இந்த இடம் முற்றிலும் வளர்ச்சி அடையா ஒரு சிறு கிராமம். இரண்டு தினங்களுக்கு முன் புதிய சட்டையை தைய்ப்பதற்காக டெய்லர் கடைக்கு சென்றேன். நான் கடைக்கு சென்ற நேரம் கடை அடைக்கப்பட்டிருந்தது. அக்கடையின் அருகில் ஒரு வயதான அம்மா அமர்ந்திருந்தார். அவர் என்னை பார்த்து புன்னகைத்து விட்டு என்னுடன் வாங்க டெய்லர் குடியிருக்கும் வீட்டிற்கு அழைத்துச் செல்கிறேன் என கூறி என்னை அழைத்துச் சென்றார். இங்கே கவனித்தாயா குமார் ஏன் அந்த வயதான அம்மா என்னை டெய்லர் இருக்கும் வீட்டிற்கு அழைத்துச் செல்ல வேண்டும். அந்த வயதிலும் மற்றவர்களுக்கு உதவ வேண்டுமென்ற உயர்ந்த மனது. அவ்வீட்டின் வாசற்படிக்கு அருகில் இரண்டு ஆண் பிள்ளைகள் 12 அல்லது 13 வயதுதான் இருக்கும் அவ்விருவரும் மாட்டு தீவனம் வைக்கும் தொட்டியில் அமர்ந்து பாதாம் பழத்தை கல்லினால் நசுக்கி அதிலிருந்து கிடைக்கும் பாதாம் பருப்பை ரசித்து உண்பதைக் கண்டேன். கண்டவுடன் அவர்களிடம் கூறத்துவங்கினேன் குட்டிப் பசங்களா! இப்படி சாப்பிடக் கூடாது. கழுவிட்டு தான் சாப்பிடனும் என்றேன். அதற்கந்த இருவரும் என்னை பார்க்காமல் அசட்டுத்தனமாக உள்ளிருந்து வரும் பருப்பு சுத்தமாக தான் உள்ளது என்றார்கள். உங்களின் கைகள் சுத்தமாக இல்லையே இப்படி நீங்கள் சாப்பிட்டால் உங்களின் வயிற்றுக்குள் புழுக்கள் வளர்ந்து விடும் என்றேன். அதற்குள் டெய்லர் அம்மாவின் குரல் கேட்டு வீட்டிற்குள் நுழைந்தேன். 20 நிமிடத்திற்கு பிறகு வீட்டைவிட்டு வெளியில் வந்தேன். அந்த இரண்டு பிள்ளைகளும் ஆன்ட்டி. . . ! பாருங்க எங்களின் கைகளை கழுவி விட்டோமென்று என் முன்னே அவர்களின் கைகளை நீட்டினார்கள். அப்போது என் மனம் கொண்ட சந்தோஷம் மிக அதிகம். அப்போது அவர்களின் அருகில் புதிதாக நின்றிருந்த ஒரு பிள்ளையை காட்டி இவனின்னும் கைகளை கழுவவில்லை என்றார்கள். நான் மிகுந்த புன்னகையுடன் நான் உங்களுக்கு கூறியதைப்போல் நீங்கள் அவனுக்கு கூறுங்கள் அப்பிள்ளையும் கேட்குமென்றேன். அம்மூன்று பிள்ளைகளும் புன்னகையுடன் ஆன்ட்டி Bye என்றார்கள். நல்ல விஷயங்களை கூறுவது நமது ஒவ்வொருவரின் கடமையாகும். அதை எடுத்துக்கொள்வதும் எடுத்துக்கொள்ளாததும் அவரவர்களின் மனநிலையினைப் பொருத்தது. ஆனால் சகிப்புத்தன்மை உடன் தொடரும் நம்முடைய நல்ல மனம் நாளுக்கு நாள் பக்குவத்துடன் வளர்ந்துக்கொண்டே இருக்கும். ஆனால் எந்த சந்தர்ப்பத்திலும் அல்லது எந்த காரணத்தைக் கொண்டும் நம்முடைய நல்ல மனதை நாமே காயப்படுத்தக் கூடாது. அதாவது நாம் கூறிய நல்ல அறிவுரையை அவர்கள் ஏற்றுக்கொள்ளா விட்டாலும் அல்லது ஏற்றுக்கொண்டாலும் அதனால் ஏற்படும் எந்த பாதிப்பையும் நம் மனதிற்கு கொடுக்கக்கூடாது.

அப்படி பாதிப்பு ஏற்பட்டால் மறுபடியும் நல்லது செய்ய சந்தர்ப்பம் ஏற்படும் போது நம்மில் தடுமாற்றம் ஏற்படும் நாம் செய்யலாமா? அல்லது செய்யக்கூடாதா? என்று. ஒரு மனிதனிடம் உள்ள உயர்ந்த குணத்தின் தன்மையே மற்றவருக்கு எதிர்ப்பார்ப்பின்றி செய்யும் நன்மை தான் அதில் எப்போதும் தடுமாற்றம் காணக்கூடாது. இவ்வாறு கூறிக்கொண்டிருந்த போது கல்லூரி முடிந்து வீட்டிற்குள் நுழைந்த அசோக் கூறுகிறான் குமார் உனக்கு தெரியுமா சென்ற வாரம் ஒரு நாள் இரவு 9 மணியளவில் கடைத்தெருவில் என்ன நடந்ததென்று என ஆரம்பித்தான். குமார் வியப்புடன் என்னண்ணா நடந்துச்சி என்றான்.

அம்மாவோ குமாரையும் அசோக்கையும் பார்த்து புன்னகைத்து விட்டு கூற துவங்கினார். அந்த சம்பவம் நடந்த இரவு நானும் உன் அண்ணாவும் கடைக்கு சென்றோம். அப்போது இரவு ஒன்பது மணி. நாங்கள் இருவரும் தேடிச் சென்ற பொருள் கிடைக்க வில்லை. அதனால் ஏமாற்றமடைந்த அசோக் என்னை வண்டியின் அருகில் நிற்க கூறிவிட்டு பக்கத்திலிருக்கும் வேறு கடைக்கு சென்றான். அங்கே நின்றுக் கொண்டிருந்த நான் சற்று தொலைவில் பதினைந்து வயதுடைய பெண் பிள்ளை குட்டி குட்டி சிம்னி விலக்குகளை ரோட்டோரத்தில் வைத்து வியாபாரம் செய்துக் கொண்டிருந்ததைக் கண்டேன். கண்டதும் எனது மனம் சிறிதளவு பதட்டப்பட்டது மற்றும் என்னை அறியாமலேயே என் கால்கள் நடக்க துவங்கியது அந்த பெண் பிள்ளை அமர்ந்திருந்த கடையை நோக்கி. கடை என்றவுடன் அறைப்போன்றுள்ள கடை என்று நினைக்க வேண்டாம். ரோட்டோரத்தில் அமைந்திருந்த கடை அவ்வளவுதான் ஆனால் நேரமோ இரவு நேரம் மற்றும் பிள்ளையின் வயதோ பதினைந்து. நான் கேட்டேன் இந்த விலக்கு எவ்வளவு என்று. அப்பிள்ளையிடமிருந்து பதில் வருவதற்குள் அடுத்த வினாவை தொடுத்தேன் படிக்கிறீயாம்மா என்று. அப்பிள்ளை கூறியது இல்லை என்று. ஏ. . . னென்றேன். நான் பத்தாம் வகுப்பு படித்துள்ளேன். மேற்கொண்டு படிக்க எனக்கு பயமாக இருக்கிறது என்றது. மறுபடியும் ஏ. . . னென்றேன். எனக்கு வலிப்பு ( fits ) வரும். வலிப்பு மற்றவர்களின் முன்னிலையில் அதுவும் என் சக மாணவர்களின் முன்னிலையில் வரும் போது என் மன நிலை மிகவும் பாதிக்கிறது என்றது. இதைக்கேட்டதும் என் மனதில் ஏற்பட்ட வலியை அப்பிள்ளையிடம் காட்டாமல் புன்னகையுடன் கூறினேன் வலிப்பிற்காக ( fits ) தினந்தோறும் ஏதாவது மருந்து எடுத்துக் கொண்டிருக்கிறாயா என்றேன். ஆம் என்றது அப்பிள்ளை tab. Phenytoin ( பெனட்டாய்ன் ) என்றது. ( இவ் வகை மருந்தை மருத்துவரின் ஆலோசனைபடி மட்டுமே எடுக்க வேண்டும் ). அந்த மருந்தை தொடர்ச்சியாக விடாமல் எடுத்தால் வலிப்பு ( fits ) வராதுடா. . . என்றேன். மீண்டும் எனக்கு பயமாக இருக்கிறது என்றது. பிறகு கேட்டேன் நீ நன்றாக படித்து முடித்து வேலைக்கு ஸ்கூட்டியில் செல்ல விருப்பமா? அல்லது தெருவில் உட்கார்ந்து பொருட்களை விற்க விருப்பமா? என்றேன். அந்த இருட்டிய நேரத்தில் கூட அப்பிள்ளையின் பற்கள் பலீச்சென மின்னல் போல் புன்னகை தெரித்து கூறியது ஆம் நான் ஸ்கூட்டியில் செல்லவே விரும்புகிறேன் என்று. அதைக் கேட்டவுடன் அப்படி என்றால் நீ நன்றாக படி வலிப்பு வருமோ என்ற பயமின்றி – நீ காரில் ( car ) வேலைக்கு செல்லும் காலம் வரும் என்றேன். உனக்கு மருத்துவம் பார்க்கும் மருத்துவரிடம் கலந்தாலோசனை செய் பிறகு உன் பயம் நீங்கி தெளிவாகி விடுவாய் என்றேன். அப்பிள்ளை கூறியது அம்மா. . . ! நான் படிக்க செல்வேன் என்றது. நம்மை சுற்றியே நமக்கு சொந்தமான சந்தோஷங்கள் நிறைந்துள்ளது. அந்த சந்தோஷங்களை நாம் அனுபவிக்க தெரியாமலும், பகிர்ந்துக் கொள்ளத் தெரியாமலும் தேடி தேடி அலைகிறோம் கடைசியில் நான் கொடுத்து வைக்காதவன் அல்லது கொடுத்து வைக்காதவள் மற்றும் என் தலை விதி இதுதான் என்று முற்றுப்புள்ளியும் வைத்து நம் சகாப்தமும் முடிந்து விடுகிறது. ஒவ்வொரு வருடமும் பிறந்த நாளை நாம் கொண்டாடுகிறோம். அதுவும் அந்த பிறந்த நாளை கொண்டாடும் சந்தர்பத்தை இழந்து விட்டால் எவ்வளவு மன உளைச்சலுக்கு ஆளாகிறோம். ஆனால் கடந்த ஒரு வருடத்தில் எத்தனை பேரை சந்தோஷப்படுத்தி மகிழ்ந்திருக்கிறோம் என்று நினைத்து பார்த்தால் நம்மில் எத்தனை பேர் இதற்கு பதில் கூறமுடியும்.

அதிலும் நம்மில் ஒரு சிலர் பெருமைக்காக பிறந்த நாளை கொண்டாடுவோம் பிறந்ததின் நோக்கமே தெரியாமல். பணமிருக்கிறது நிறைய சொந்தங்கள், நண்பர்கள் இருக்கிறார்கள் என்பதற்காக பணத்தை வீணடிப்போம். ஆனால் இருக்கும் வீடோ அனாதை இல்லம், சொந்தங்களோ உடனிருக்கும் ஆதரவற்றவர்கள் இருப்பினும் சந்தோஷத்திற்கும் , மன நிறைவிற்கும் இவர்கள் தான் நுழைவாயில்கள் என்பதை மனதில் கொண்டு நம்மில் எத்தனை பேர் இவர்களுடன் இணைந்து நம் பிறந்த நாளை கொண்டாடியிருக்கிறோம். அங்ஙனம் நம்மிடமுள்ள பணத்தையும் அன்பையும் அவர்களுடன் பகிர்ந்து கொள்ளுவோமாயின் சங்கடங்கள் நம்மைவிட்டு நீங்கி சந்தோஷமும் மன நிறைவும் நம்மிடமே மண்டியிட்டு அமர்ந்து விடுமல்லவா?. ஒரு சிலர் மரணிக்கும் தருவாயில் கூட புலம்ப கேட்டிருக்கிறேன் மற்றும் நம்மில் ஒரு சிலர் நினைப்போம் என்னிடம் பணமில்லை என்னால் எங்ஙனம் அடுத்தவருக்கு உதவ முடியுமென்று. உங்களிடம் பணம் மட்டும் தான் இல்லை ஆனால் உதவ வேண்டுமென்ற நல்ல மனம் இருப்பின் நம்முடைய நாவைக்கொண்டு உதவுங்கள். உதாரணமாக மேலே குறிப்பிட்டிருந்தேன் அந்த பாதாம் பருப்பை உடைத்து சாப்பிட்ட குழந்தைகளுக்கு நான் அறிவுரை கூறியபோது கோபத்தால் அக்கல்லை கொண்டு என் தலையை உடைத்திருக்கலாம் அந்த பயம் என்னிடமும் சிறிதளவேனும் இருந்திருக்குமல்லவா? ஆனால் என் எண்ணம் என்னால் முடிந்த அளவு நல்ல விஷயத்தை எடுத்துரைப்பதுதான். இவ்வாறு நாம் உதவக்கூடிய அளவு எவ்வளவோ சந்தர்ப்பங்கள் நம்மைச்சுற்றியே தினந்தோறும் நடக்கும். அப்போது நமக்கென்ன என்று நினைக்காமலும் மற்றும் நன்மை செய்ய வேண்டுமென்பதற்காக நம்மை மன உளைச்சலுக்கும் உடல் உளைச்சலுக்கும் ஆளாக்கிக்கொள்ளாமல் நம் ஐம்புலன்களுக்கு தென்படும் போது நம் நாவால் நன்மை செய்ய பழகிக்கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த அம்மா தன் பிள்ளைகளுக்கு கூறி முடித்தார். குமார் கூறினான் அம்மா நான் தவறு செய்து விட்டேன். ரவி என் மீது வண்டியை கொண்டு இடிக்க வந்த போது அறிவுரைக்கூறி நல்லது செய்தேன். ஆனால் அவன் விபத்திற்கு ஆளான பிறகு என் அறியாமையினால் அவனுடைய வலியை உணராது அவனுக்கு அப்படிதான் ஆகவேண்டும் என கூறி என் நாவால் தீங்கு செய்துவிட்டேன் அம்மா எனக்கூறி பதட்டத்துடன் கிளம்பினான் தன் அம்மாவுடன் மருத்துவமனைக்கு ரவியைக்காண. தன் பிள்ளைகளை ஒரு மனிதனாக வளர்ப்பது ஒரு தாய் தந்தையின் கடமை. அங்ஙனம் வளரும் பிள்ளைகளை மாமனிதனாக ஆக்குவது ஆசிரியர், நண்பர்கள் மற்றும் சமுதாயத்தின் மகிமை என நான் நினைக்கிறேன். நீங்கள். . . ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 1 =