அனுபவம் 16

பொழுதமர்ந்த மாலை நேரத்தில் கடற்கரை ஓரத்தில் உள்ள மணற்பரப்பில் அமர்ந்து தன் பேரப்பிள்ளைகளை விளையாடவிட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் வயதான தாதாவும் பாட்டியும் உரையாடிக் கொண்டிருக்கும் உரையாடலை நம் கண்முன்னே கொண்டு வர முயல்கிறேன். கணவரான தாதா வினவுகிறார் தன் மனைவியான பாட்டியிடம் ” ஏண்டி மரகதம் உனக்கு நினைவிருக்கிறதா? நம் பேரப்பிள்ளைகளின் வயது தான் இருந்திருக்கும் நம் பிள்ளைகளுக்கு அப்போது இங்கு அவர்கள் விளையாடி கொண்டிருந்த போது அந்த நிலவொளியின் வெளிச்சத்திலும் அந்த கடலலையின் ஓசையிலும் நம்மிருவரின் குரல் உயர்ந்து உரையாடியும், மகிழ்ச்சியால் நம் உள்ளம் நிறைந்து நிலவொளி உணவு உண்டிருக்கிறோம். அப்போது நான் நினைத்ததுண்டு அந்த வெளிச்சம் நிலவிலிருந்து தான் நமக்கு கிடைக்கிறதென்று. ஆனால் இப்பொழுதுதான் எனக்கு புலப்படுகிறது அன்றுகிடைத்த நிலவொளி நிலவிலிருந்து அல்ல அது என் மரகதத்தின் முகத்திலிருந்து என. பாட்டியவள் புன்னகைக்கிறார் புதிரான புதிதான விடைக்கேட்டு மற்றும் ” இப்ப மட்டும் எப்படி உணர்ந்தீர் என”. அதற்கந்த தாதா கூறுகிறார் ஆம் இன்று என் கண்களினால் நன்கு பார்க்கும் திறனை இழந்தும் என்னால் அந்த வெளிச்சத்தை காணமுடிகிறது உன் குரல் கேட்டு. நீ என்னுடன் இருப்பதால் தான் அந்த நிலவொளியும் என்னுடனே இருக்கிறது. இருவரும் சேர்ந்தே இறக்கும் தருணத்தை இறைவன் நமக்கு கொடுக்க வேண்டும். நீ இன்றி நானோ, நானின்றி நீயோ இவ்வுலகில் வாழ்வது கடினம் என்றார் கண்ணீர் துளியுடன். அதைக் கேட்ட பாட்டி கூறுகிறார் நான் உமக்கு முன்பாக இறந்து விட்டாலும் நீங்கள் கவலையுடனோ அல்லது மனம் தளர்ந்தோ விடக்கூடாது. நம் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் மற்றும் நல்ல சொந்தங்களும் நமக்கு உண்டு எனக்கூறி ஆறுதலளிக்க முயல்கிறார் பாட்டியவர். ஆனால் தாதாவர் கூறுகிறார் அளவுகடந்த பணம் சம்பாதித்து வைத்துள்ளேன், நீ கூறியது போல் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், சொந்தங்கள் என நிறைவு தரும் வசதிகள் உண்டெனிலும் என் மரகதத்திற்கு இணை உண்டோ. மரணத்தின் போது கடைசியில் மூடி மறைவது கண்கள் தான் அத்தருணத்திலும் என் மரகதம் என்னுடன் இருப்பின் என் மூடிய கண்களில் கூட என் நிலவைக் காண்பேன் என்றார். அப்போது புதிதாக ஒரு குரல் ஒலிக்கிறது. நன்றி ஐயா! என் கேள்வியிற்கு விடைக்கொடுத்தீர் உங்களின் உரையாடலினால் என்று ஒரு பெண்மணி கூறுகிறார். தாதாவும் பாட்டியும் அந்த பெண்மணியை நோக்கி பார்க்கிறார்கள். அந்த பெண்ணானவள் கூறுகிறார் நான் மரணிக்கும் தருவாயில் உள்ளேன். மருத்துவர்களும் எனக்கு நாள் குறித்துவிட்டார்கள். புற்று நோய் எனும் என் உயிர் தோழனிடம் தினந்தோறும் உறவாடிக்கொண்டிருக்கிறேன். என் கணவனாகிய கார்மேகம் திருமணமாகிய சில வருடங்களிலேயே என்னை விவாகரத்து செய்து விட்டார். பிறகு என் விடா முயற்சியுடன் ஒரு மின்னலைப் போல் செயல்பட்டு அந்த கார்மேகத்தை என் கண் பார்வையிலிருந்தும் அகற்றினேன். நான் இந்நோயிற்கு உள்ளான பிறகு என் சுற்றதார்கள் என்னிடம் கூறினார்கள் உன் கணவரை மன்னித்து உன்னுடன் சேர்த்துக் கொண்டால் உன்னுடைய இந்த கடைசி தருணத்திலாவது சிறிதளவேனும் நிம்மதி கிடைக்குமே என்றார்கள் என் மனவலி அறியா உறவுகள். நான் வாழ வேண்டிய வயதில் மன வலியால் துடித்திருக்கிறேன், தூண்டிலில் அகப்பட்ட மீனாய் துடித்திருக்கிறேன், துவண்டுமிருக்கிறேன். இந்த கடைசி என் மரணத்தருணத்திலும் அந்த கார் மேகத்தை நினைக்க மறுக்கிறது தூங்கச் செல்லும் என் கண்கள் கூட. உங்களின் உரையாடலைக் கண்டு கேட்ட போது என் குழந்தை பருவத்திலும், சிறு வயதிலும் என் பெற்றோரிடம் சிரித்துக் களித்த நினைவுகள் என்னுள்ளே மலர்கிறது. மேலும் அந்த தாதாவை பார்த்து கூறுகிறார் ” நீர் மேகமாக இருந்ததால் தான் இன்று வரை உங்களின் மனைவி உங்களுக்கு நிலவாகவே தெரிகிறார், நான் கார் மேகத்தில் அகப்பட்டதால் தான் மின்னலாக மிளிர்கிறேன் “. ஆகமொத்தம் பெண்ணானவள் நிலவாகவோ, மின்னலாகவோ வாழ்வது அவளின் வாழ்கை துணையை பொருத்தே எனக்கூறி விடைப்பெருகிறாள் அந்த மின்னலரசி.

https://youtube.com/channel/UCwgi7SBcSaZz4LAouXbsbTQ

Leave a Reply

Your email address will not be published.

11 − six =