பெண்மை 9

பெண்மை என்பது ஒரு இரகசிய பெட்டகம்ங்க. அதை எந்த திறவு கோலைக்கொண்டும் திறக்க முடியாதுங்க. ஒரே ஒரு திறவுகோல் தான் உண்டு. அந்த திறவுகோல் தான் ஒரு நல்ல கணவன். பெண்ணின் வெளி அழகிற்கு அழகு சாதனம் பூட்டி அழகுப்படுத்தலாம். ஆனால் பெண்மையென்பது மிகவும் அழகானது, அடக்கமானது, தெளிவானது, அன்பானது, அமுதானது. இவை அனைத்தையும் உணர்பவன் ஒரு நல்ல கணவனாக இருப்பவனுக்கு மட்டும் தான்ங்க தெரியும் அந்த பெண்மையின் தன்மை. எப்போது அந்த திறவு கோலானது நல்ல கணவனாக இல்லாமல் போகிறதோ அல்லது ஏமாற்று காரனிடம் மயங்கி விடுகிறதோ அப்பொழுது தானாகவே அப்பெண்மையின் தன்மை மாறத்துடங்கி விடுகிறது. அத்தருணத்தில் கூட அப்பெண்ணிடம் இரக்க குணம் இருப்பதால் தான் தன் இயலாமையை மீடியாக்களில் காணும் அளவிற்கு நடந்துக்கொள்கிறாள். ஏனென்றால் அவளுக்கு மறைக்கவும், மறுக்கவும் அவளின் பெண்மையானது இடம் கொடுப்பதில்லை. இதைதான் விதி என்று முற்றுப்புள்ளியும் வைத்து விடுகிறாள். அப்படியல்ல வாழ்க்கையில் தோற்ற மற்றும் தோற்றுக்கொண்டிருக்கும் எத்தனையோ பெண்களுக்கு நான் கூற விரும்புவது – தோல்வியுற்ற காலத்தை தன் வாழ்கையின் கடைசிப்படியாக வைத்துக் கொள்ளுங்கள். வாழ்கையில் சாதிக்க எத்தனையோ வழிகள் உண்டு. ஏன் கை, கால், கண் இல்லாதவர்கள் எதையும் சாதிக்கவில்லையா? உங்களிடம் எல்லா உறுப்பும் இருக்கிறது உங்களின் தோல்வியுற்ற மனதை தட்டி எழுப்ப. உன்னுடைய இம்மேலான உறுப்புகளின் தன்மைக்கு எந்த ஆணும் நிகரானவர்கள் அல்ல என்ற திடமான தன்னம்பிக்கை உன்னிடம் இருப்பின் அதுவே உன்னுடைய பெண்மையின் முதல் சாதனை. பெற்றவர்கள் கூறுவார்கள் ஆண் துணை இல்லாமல் இவ்வுலகில் வாழமுடியாது என்று. அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் கூறுவார்கள் ஒரு ஆண் துணையில்லாமல் எப்படி இவளால் இவ்வளவு சிறப்பாக குடும்பத்தை சமாளிக்க முடியும் என்று, உறவினர்கள் கூறுவார்கள் அந்த பெண்ணின் போக்கும், நடவடிக்கையும் சரியில்லைங்க என்று, ஏன் பெற்ற பிள்ளைகளும் கூறும் நிலை ஏற்படும் அம்மா நீ இனி வேலைக்கு செல்லக்கூடாது அடுத்தவர்கள் தவறாக பேசுகிறார்கள் என்று. இவ்வனைத்து கூற்றையும் உள்வாங்கி மனம் தளராமல் இங்ஙனம் கூறும் அணைவரும் சாதிக்க தெரியாதவர்கள் மற்றும் மற்றவரை மனம் கலங்க வைத்து அதிலிருந்து தன் மனதை சந்தோஷத்தில் ஆழ்த்திடும் மனித நேயமற்றவர்கள் என்ற மனதிடத்துடன் இதுவே தனக்கு கிடைத்த சிறந்த ஊன்று கோல் என்று எண்ணி நீ முன்னேறும் வழி சகதியாக இருந்தாலும் சரி அவ் ஊன்று கோலை தன் வலது காலுடன் சேர்த்து ஊன்ற வேண்டும். அதுதாங்க உண்மையான பக்குவமடைந்த பெண்மையின் திடமான தன்மை. எத்தனையோ பெண்கள் ஏட்டிலும் மீடியாக்களிலும் வெளிவராத சாதனையாளர்கள் வாழ்ந்தும், வாழ்ந்துக் கொண்டும் தான் இருக்கிறார்கள். அப்பேற்பட்ட பெண்களை என்னால் வெளி உலகிற்கு கொண்டு வர முடியவில்லை. ஆனால் அவர்களுடைய மனதிடத்தை என்னால் சிறிதேனும் வெளிபடுத்த கிடைத்த இத்தருணத்திற்காக எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி கூறுகிறேன். அக் காலத்தில் கணவன் இறந்தவுடன் உடன் கட்டை ஏறும் வழக்கம் இருந்தது. இக் காலத்தில் கணவன் இல்லை என்றாலும் கணவன் இன்னொரு திருமணம் முடித்துக் கொண்டாலும், கணவன் தன் மனைவியிடம் மனதார வாழாமல் வெறுப்புடன் வாழ்ந்தாலும் அத்தனையையும் சகித்துக் கொண்டு தினம்தினம் உடன் கட்டை ஏறும் பெண்கள் தான் எத்தனை பேர். இறப்பு என்பது ஒரு முறை என்கிறார்கள் ஆனால் தினந்தினம் இறந்தும், பிறந்தும் தன் பிள்ளைகளுக்காக வாழும் தாய்மார்கள் தான் எத்தனை பேர். இவ்விடத்தில் நான் உணர்த்துவது உடன் கட்டை ஏறும் வழக்கம் தடை செய்யப்பட்டுவிட்டது அதை முதலில் நம் மனங்களில் பதிக்க வேண்டும். எந்த அளவிற்கு அனுசரித்து நடக்க முடியுமோ அந்த அளவிற்கு அனுசரியுங்கள் குடும்ப வாழ்க்கையில், தாங்க முடியாத தருணமென்று ஒன்று வரும் போது தீர்க்கமான முடிவெடுங்கள். அந்த முடிவு கோழைத்தனமான தற்கொலை அல்ல. சாதனை படைக்க உங்கள் திறனுக்கேற்றார் போல் தேர்ந்தெடுங்கள். பிள்ளைகள் இருந்தால் பிள்ளைகளுடன் உங்கள் வாழ்கையைத் தொடருங்கள். பிள்ளைகள் இல்லையேல் அனாதை இல்லத்திற்கு சென்று ஒரு குழந்தையை தத்தெடுத்து உங்களின் சாதனையை பதியுங்கள். புத்துணர்ச்சியும் புது வழியும் பிறக்கும் பூமகள் புன்னகைத்து கால் ஊன்றினால் என நம் பெண்மைக்கு ஒரு புது உணர்வு கொடுங்கள் புத்துணர்வுப் பெண்களே!

Leave a Reply

Your email address will not be published.

5 + 5 =