பெற்றோரின் பெருமை 9

கண்ணெதிரில் கண்டும், செவி இன்புற கேட்டும், காலம் போற்றும் பல்வேறுபட்ட பெற்றோர்களில் நானறிந்த படைப்பாளியை பெருமைப்படுத்த முயல்கிறேன் உங்களுடன் இணைந்து. ஆம் ஒரு சில தினங்களுக்கு முன் அபுதாபி விமான நிலையத்தில் அமர்ந்திருந்தேன் சென்னை வருவதற்காக. 5 மணி நேரம் கழித்து தான் எனக்கு விமானம். சுற்றும் முற்றும் பார்த்தேன் ஏதேனும் ஒரு இந்திய பெண்மணி கிடைத்தால் அவர்களுடன் சேர்ந்து ஒரு காபி (coffee) அருந்தினால் நன்றாக இருக்கும் என. அப்போது என் பின் புறத்திலே ஒரு பெண் அமர்திருந்தார். அவரின் பெயர் துர்கா. அவர் பேரிஸ் ( Paris) லிருந்து வந்து அங்கே அமர்ந்திருந்தார் சென்னை வருவதற்காக மற்றும் கர்ப்பிணியாகவும் ( preqnant) இருந்தார். மன சங்கடத்துடன் அமர்ந்திருந்த அவரிடம் பேசத்துவங்கினேன் அவரின் முகத்தில் தெரிந்த கவலையைப் போக்க. அப்போது நான் முதலில் கேட்க ஆரம்பித்தேன் ஏன் நீங்க பேரிஸ் லிருந்து preqnant ஆக இருக்கும் போது இந்தியா வருகிறீர்கள் அங்கே குழந்தை பிறந்தால் உங்களுக்கும், குழந்தைக்கும், உங்களின் கணவருக்கும் அந்த நாட்டு நாட்டுரிமைக் கிடைக்குமே என்றேன். அதற்கந்த பெண் கூறினார் என் அத்தை மாமா மிகவும் வயதானவர்கள் மற்றும் அவர்களின் உடல் நிலையும் சரியாக இல்லை. பேரிஸில் குழந்தை பிறந்த பிறகு மூன்று வருடத்திற்கு இந்தியா வரமுடியாது என்றார்கள். அதனால் தான் என் அத்தை மாமாவின் உடல் நிலையை கருத்தில் கொண்டு இந்தியா வருகிறேன் என்றார். எனக்கு சற்று ஆச்சரியமாக இருந்தது ஏனென்றால் அந்த பெண் என் அப்பா அம்மாவிற்காக இந்தியா வருகிறேன் என்று கூறவில்லை என் அத்தை மாமாவிற்காக என்று கூறியதை கேட்டவுடன் அந்த பெண்ணிடம் பேசுவதில் என் ஆர்வம் அதிகமானது. சொந்த ஊர் எது என்று கேட்டேன். அதற்கவர் புதுக்கோட்டைக்கு அருகிலுள்ள ஒரு கிராமம் என்றார். அடுத்தப்படியாக அவரே பேசத் துவங்கினார். இந்த உலகத்திலேயே எங்களுக்கு கிடைத்த அப்பா அம்மா மாதிரி யாருமே இருக்க முடியாது என்றார். அவரின் முகத்தை நோக்கி புன்னகைத்தேன் சுவாரஸ்யமாக ஏனென்றால் நம்மில் பெரும்பாலோர் கூறுவது இவ்வாறு தானே அதனால் தான். ஆனால் அவர் தொடர்ந்தார் ஆம் நாங்க ஐந்து பிள்ளைகள். அதில் முதல் நான்கு பேரும் பெண்கள் ஐந்தாவதாக ஒரு தம்பி. நாங்க நான்கு பெண்களும் ஒவ்வொரு துறைக்கான ஆசிரியைகளாக பணி புரிகிறோம் அதில் நான் மூன்றாவது பெண் தான் ஒரு தமிழ் ஆசிரியை என்றார். தம்பி இப்போது கல்லூரியில் படித்துக் கொண்டிருப்பதாகவும் கூறினார். நான்கு பெண்கள் என்பதே சற்று ஜீரணிக்க முடியாத விஷயம் அதிலும் நான்கு பெண்களுமே ஆசிரியைகளாக பணிப்புரிகிறார்கள் என்று கேட்டதும் என் மனம் கூறியது ஒருவேளை இவரின் அப்பா நல்ல வருமானம் வரும் பணியில் இருப்பார் போலிருக்கு என. உடனே கேட்டேன் அப்பா என்ன செய்கிறார் என்று. அவரின் கண்கள் கலங்கிய நிலையில் கூறினார் என் அப்பா ஒரு மளிகை கடை வைத்துள்ளார். என் அப்பாவிற்கு வயது ஒன்பது இருக்கும் போது என் தாதா அவருக்கு கொடுத்தது. அன்றிலிருந்து இன்று வரை அக்கடையில் எவ்வித முன்னேற்ற வழிகளையும் செய்யாமல் அதிலிருந்து வரும் வருமானத்தை கொண்டே எங்கள் அனைவரையும் படிக்க வைத்தார் என்றார். ஆனால் என் மனம் கூறியது அவர் உங்களை படிக்க வைத்தது மட்டுமல்ல ஒன்று இரண்டல்ல நான்கு ஆசிரியைகளை உருவாக்கிய சாதனை படைப்பாளி என்றது மற்றும் என் கண்களுடன் உள்ளமும் பணிந்தது அவரின் சாதனைக்கு. இந்த துர்காவின் தந்தை எந்த துறையில் வேண்டுமானாலும் தன் பிள்ளைகளை கொண்டு சென்றிருக்கலாம் ஏன் ஆசிரியர் துறையை தேர்ந்தெடுத்தார் என்றேன். அதற்கவர் கூறினார் ஆம் என் அப்பா பள்ளி செல்லும் வயதில் குடும்ப பாரத்தை சுமப்பதற்காக பள்ளி கூடத்திற்கு பதிலாக மளிகை கடைக்கு சென்றதால் தனக்கு கிடைக்காத கல்வியை தன்னால் முடிந்த வரை தன் பிள்ளைகளின் மூலமாக மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டுமென்று நினைத்து தான் எங்களுக்கு ஒரு தூண்டு கோலாக இருந்தார் மற்றும் ஊரில் உள்ள பெரியவர்கள் மற்றும் உறவினர்களெல்லாம் கூறுவார்களாம் நான்கு பெண் பிள்ளைகளுக்கும் காலாகாலத்தில் திருமணம் செய்து வைக்காமல் ஏன் பணத்தை கொட்டி படிக்க வைக்கிறாய் என்பார்களாம். அதற்கந்த அப்பா கூறிய பதில் என் பெண் பிள்ளைகள் யாரிடமும் கையேந்தி விடக்கூடாது என்றாராம். எவ்வித பாகுபாடின்றி பணத்தளவிலும், மனதளவிலும், நகையளவிலும் சரி சமமாக கொடுத்து இப்பெண்களுக்கு திருமணமும் முடித்து வைத்துள்ளாராம். பண்டிகை தினமென்று வந்து விட்டால் வீட்டிலுள்ள அனைவருக்கும் புத்தாடை வாங்கி கொடுத்து அவருக்கு மட்டும் வேண்டாமென்று கூறிவிட்டு தன் பிள்ளைகள் அவ்வாடையை அணிந்த பிறகு ஓரிடத்தில் அமர்ந்து மகிழ்ச்சியுடன் ரசிப்பாராம். பசித்தீர உணவளிக்கும் போதும் பாரம்பட்சம் பார்க்காது, பசி மயக்கம் வந்தாலும் துயில் வேட்கை கொள்ளாது, துக்கம் கவலை நெஞ்சை அழுத்தினாலும் கடக்கவிருக்கும் பாதைக்கு அஞ்சாது, பட்டப்படிப்பு கொடுத்தும் பணத்தை எதிர் நோக்கி நிற்காது, பட்டப்படிப்பு கொடுக்கும்போதும் பாரம்பட்சம் காட்டாது வாழும் பெற்றோர்களை எங்ஙனம் போற்றி பெருமைப்படுத்துவது. இங்கே அந்த பெண்ணிடம் நான் கண்டது படிப்பறிவு மட்டுமல்ல பக்குவப்பட்ட நல் வளர்ப்பு முறையும் தான். ஆம் இவ்வளவு தன் அப்பாவைப்பற்றி கூறிய பெண் தன் அப்பாவிற்காக இந்தியா வருகிறேன் என்று கூறவில்லை தன் அத்தை மாமாவிற்காக இந்தியா வருகிறேன் என்றார். இங்கே படிப்பறிவோடு பக்குவப்பட்ட பண்பாட்டையும் கற்றுக் கொடுத்த இந்த தாய் தந்தைக்கும் மற்றும் நம் கண்களுக்கும், நம் செவிகளுக்கும் புலப்படாத எத்தனையோ பெற்றோர்கள் இவ்வுலகில் வாழ்ந்தும், மறைந்தும், வாழ்ந்துக் கொண்டும் தான் இருக்கிறார்கள். அப்பேற்பட்ட சாதனை படைப்பாளிகளுக்காக இறைவனிடம் வேண்டுவோம் அவர்கள் அனைவருக்கும் சொர்கத்தில் ஓர் இடம் வேண்டுமென.

One thought on “பெற்றோரின் பெருமை 9”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − 11 =