பெற்றோரின் பெருமை 10

பெற்றோரின் பெருமையை போற்றி புகழ்ந்து வரும் நான் இன்று அணைத்து பெற்றோர்களுடனும் உங்களில் நானும் ஒரு பெற்றோர் என்ற நிலையில் அமர்ந்து உரையாட விழைகிறேன். ஆம் ஒரு மனிதனின் சுழற்சி என்பது
1.சிசு
2. தவழும் பருவம்
3. குழந்தை பருவம்
4. பள்ளி பருவம்
5. வாலிப பருவம்
6. கல்லூரி பருவம்
7. திருமணம்
8. குடும்பம்
9. பிள்ளைகள்
10. பெற்றோர்கள்
11.வயதானவர்கள்
12. கடைசியில் மரணம்.
இங்கே பாருங்க சிசுவிலிருந்து கல்லூரி பருவம் வரை பேணிக்காப்பது ஒவ்வொரு பெற்றோரின் கடமையில் அடங்கி விடுவதால் கவலையின்றி தன்னிலையை எண்ணாது, தாய் தந்தையின் கவலைகளை துளி அளவும் மனதில் சிந்திக்காது, உலகமென்பது மிகவும் பெரியது அதில் எங்கு வேண்டுமானாலும் வாழ்ந்து விடலாம் நம்மிடம் படிப்புள்ளது என்ற சுயக்கட்டுப்பாடு இல்லாத தன்னம்பிக்கையில் அழுத்தமாக அடியெடுத்து வைப்போம் திருமணம் என்ற தெய்வீகத் தோட்டத்தில்… தவறில்லை. ஆனால் இந்த திருமணத்திலிருந்து தன் மரணம் வரை வாழும் வாழ்க்கையில் நம் பெற்றோர்களை எதிர் பார்க்க முடியாது அவர்கள் வயதாகி இருப்பார்கள் அல்லது இறந்தேயிருப்பார்கள். இங்கே நாம் தான் பெற்றோர் நம் வாரிசுகளுக்கு என்ன செய்ய போகிறோம், எப்படி சமாளிக்கப் போகிறோம் என்ற மன அழுத்தத்தில் தம்மைத்தாமே நோயாளி ஆக்கிக் கொள்ளாமல், மன அழுத்தத்திற்கு ஆளாகாமல் எவ்வாறு மரணம் வரை நம் வாழ்க்கையை இலகுவாக நகர்த்துவதுப்பற்றி உங்களிடம் உங்களில் ஒருத்தியாக இருந்து கலந்துரையாடப் போகிறேன். இப்பதிவு உங்களை கவர்ந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள் புன்பட்ட பெற்றவர்களுக்கு பன்பட இது ஒரு மருந்தாகட்டும்.

* திருமணம்*
நன்றாக வாழ்ந்த மற்றும் வாழும் குடும்பங்களை காணும்போது அவ்வீட்டின் குத்து விளக்காக திகழ்வது அக் குடும்பத் தலைவியே என்று அறியும் போது மெய் சிலிர்க்கிறது பெண்ணே! மறுபுறம் ஒரு சிலக் குடும்பங்கள் அழிந்தும் அழித்துக் கொண்டுமிருக்கிறது அதற்கும் காரணம் ஒரு பெண்ணே என்று அறியும் போது மெய் நாணுகிறது பெண்ணே. பெண்ணே நீ தான் நாளைய பெற்றோர் என்பதை மறவாதே.

*குடும்பம் *
ஒரு நல்ல குடும்பத்தை உருவாக்க நான் ஒரு சில நல் வழிகளை யாருக்கும் பாதிப்பில்லா வகையில் கொடுக்க விரும்புகிறேன்.
*திருமணமாகி புகுந்த வீட்டிற்கு செல்லும் போது நான் ஒரு மகளாக அவ்வீட்டிற்கு செல்கிறேன் என்று நினைப்பதோடு மட்டுமல்லாமல் , மகள் என்பதை மனதில் பதிய வைத்துக்கொள்ள வேண்டும். புகுந்த வீட்டிற்கு அனுப்பி கொடுக்கும்போது தன்னை கட்டி அணைத்து அழும் தாய், தந்தை மற்றும் அணைத்து உறவினர்களிடமும் மனதிடத்துடன் கண்ணீரின்றி நான் அந்த வீட்டிற்கு மகளாக வாழச்செல்கிறேன் என்று கூறும் பக்குவத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
*புகுந்த வீட்டிலுள்ளவர்களும் நம்மை மகளாக நினைக்க வேண்டுமென்று எதிர்பார்க்கக்கூடாது. நீங்கள் அங்கு நடந்து கொள்ளும் விதத்தில் உள்ளது எவ்வளவு நேரமோ, எவ்வளவு நாட்களோ அல்லது எவ்வளவு காலமோ நீங்கள் அந்த வீட்டில் மகள் என்ற இடத்தை பிடிப்பதற்கு. ஆனால் மகளை போல் நடிக்கக்கூடாது. அது நிலைக்காது. எது செய்தாலும் அங்கே மனித நேயம் இருக்க வேண்டும். இதற்கு ஒரு உதாரணம் : உங்களுக்கு ஒரு உயர் பதவி கிடைக்கிறது. புதிய அலுவலகத்தில் நுழைகிறீர்கள். அந்த அலுவலகத்தில் உள்ள அணைவரும் உங்களிடம் ஒரே மாதிரியாக இருக்க மாட்டார்கள். அதேப்போல் அவர்கள் எல்லோரும் ஒரே மாதிரியாக நம்மிடம் இருக்க வேண்டுமென்று நினைப்பதும் தவறுதானே. நாளடைவில் உங்களைப் பற்றி அவர்கள் நன்கு அறிந்த பிறகு நீங்கள் எதிர்பார்த்தது கிடைக்குமல்லவா? சம்பளத்திற்காக வேலை செய்யும் இடத்திலே இப்படி என்றால் ஒரு குடும்பத்தின் தலைவியாகப் போகும் இடத்தில் எத்தனை மடங்கு பொருமை வேண்டுமென்பதை புரிந்து நடந்துக்கொள்ள வேண்டும்.
*உங்களின் கணவர் புதிதாக திருமணமாகிய சந்தோஷத்தில் தன் இயல்பு நிலையை மீறி அவரின் தாய் தந்தை அறியாது நிறைய செய்வார்… தவறில்லை. அவர் உன்னுடைய கணவர் ஆனால் அவரின் இயல்பு நிலையை மீறி தன் பெற்றோர்களுக்கு தெரியாமல் செய்தது அவர்கள் அறியும் போது அவர்களின் கோபம் உங்கள் மீது தான் வரும். இது பெற்றோரின் இயல்பு. இதை சகித்துக் கொள்ள கற்றுக் கொள்ள வேண்டும். அல்லது தன் கணவர் செய்யும் செயலால் தன் அத்தை மாமா அதை அறியும் போது வருந்துவார்கள் என்று நீங்கள் நினைத்தால் அதை உங்கள் கணவரிடம் நல்ல முறையில் எடுத்துரையுங்கள். இதுவே சிறந்தது ஏனென்றால் ஆண்கள் எப்போதும் எவ்வழியில் வேண்டுமானாலும் சாய்ந்து விடுவார்கள். இன்று உங்களுக்கு சாதகமாக இருந்தவர் ஒருவேளை தன் அம்மா அப்பா அறியும் சந்தர்பத்தில் உங்களையே திருப்பி கேள்வி கேட்கும் நிலையே உருவானாலும் உருவாகலாம். ஏன் அன்று நீ இதை வேண்டாமென்று கூறவில்லையென்று. அதனால் தான் கூறுகிறேன் இவ்வீட்டிற்கும் மகளாகவே மாறிவிடுங்கள்.
*உங்கள் கணவரின் இரத்த சொந்தங்களை அரவணைக்க கற்றுக்கொள்ளுங்கள். அவரின் அண்ணா, அக்கா, தம்பி, தங்கை யாராக இருந்தாலும் எந்நிலையில் இருந்தாலும் நீங்கள் அவர்களின் வயதில் குறைந்தே இருந்தாலும் அவர்களுக்கு ஒரு அம்மாவாக அறவணைக்க கற்றுக் கொள்ளுங்கள். இங்கே ஏற்பட்ட அம்மா என்ற அறவணைப்பின் தொடர்ச்சிதான் உங்களின் பிள்ளைகள் என்பதை மறந்து விடக்கூடாது. இவ்வழியை கையாலும் போது உங்கள் பிள்ளைகளை வழி நடத்தும் முறையும் உங்களுக்கு இலகாகிவிடும்.
*இவ்வாறு நீங்கள் புகுந்த வீட்டில் ஒரு மகளாகவும், ஒரு அம்மாவாகவும் இருக்கும் போது உங்களின் பக்கபலம் யாராக இருக்குமென நினைக்கிறீர்கள். முதலில் இருப்பது உங்களின் அத்தை மாமாவாக தான் இருப்பார்கள். உங்களின் கணவரே உங்களை திட்டினாலும் அங்கு எதிர்த்து குரல் கொடுப்பவர்கள் உன் அத்தை, மாமாவாகதான் இருக்கும்.

* பிள்ளைகள் *
* பிள்ளைகளை அவர்களைப் போல் வளர்க்க வேண்டும், இவர்களை போல் வளர்க்க வேண்டுமென்று நினைக்காமல் அவர்களை அவர்களாகவே வளரவிடுங்கள். குடும்ப சூழ்நிலையை மட்டும் அவர்களுக்கு தகுந்தாற்போல் மாற்றி நீங்கள் ஒரு முன் மாதிரியாக நல் வழியில் நடைப்போடுங்கள் உங்களைப் பார்த்து அவர்களும் நல் வழியில் நடக்க துடங்கி விடுவார்கள்.
* ஒரு குழந்தையின் சுற்று சூழலில் அமைந்த ஏதோ ஒன்று தான் அவன் எவ்வளவு படித்தாலும் அவனின் தொழில் துறையாக அமையும் என்பதில் எவ்வித மாற்று கருத்தும் கிடையாது. அதனால் எத்துறையை உங்களின் பிள்ளை பெற வேண்டும் என நினைக்கிறீர்களோ அத்துறைக்கான சம்பந்தப்பட்ட விஷயங்களை இடையிடையே வாழ்க்கை நடைமுறையில் பெண் பிள்ளைக்கு அல்லது ஆண் பிள்ளைக்கு கண்முன்னே கொண்டு வர வேண்டும். இவ்வாறு செய்யும் போது பின்னாடி வருந்தும் நிலை நமக்கு ஏற்படாது.
* ஒவ்வொரு குழந்தையின் இன்ஸ்பிரேசன் ( inspiration ) என்பது அக்குழந்தையின் இரத்தத்ததிலேயே கலந்துள்ளது அவர்களுடைய அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி, கொள்ளுதாத்தா, கொள்ளுபாட்டி என. அதனால் குழந்தைகள் வளரும் போது அவரைபோல் இவரைப்போல் இருக்க வேண்டும் என்பதெல்லாம் வார்த்தையளவில் அவர்களின் வயதிற்கேற்றார் போல் மட்டுமே.
* குடும்ப கஷ்டத்தையும், பண கஷ்டத்தையும், அடுத்தவருக்கு உதவும் பண்பையும் கண்முன்னே காட்டி வளர்க்க கற்றுக்கொள்ளுங்கள். இங்கே தான் பட்ட கஷ்டத்தை தன் பிள்ளை அறிய கூடாதென்பதை விட தனக்கேற்பட்ட கஷ்டம் போல் அவனுக்கு வந்துவிட்டால் அதை அவன் எவ்வாறு எதிர் கொள்ள வேண்டுமென்பதை கற்றுக் கொடுக்க வேண்டும்.
* பிஞ்சு விரல்களாக இருக்கும் போது பென்சில் பாரமாகி விரல்களுக்கு தீங்கை விளைவிக்கும் என்று நினைப்பது போல பிள்ளைகள் வளர்ந்த பிறகு கல்லை தூக்க சொல்லிக் கொடுப்பதில் தவறில்லை என்பதை பெற்றோர்கள் முதலில் புரிந்துக்கொள்ள வேண்டும்.
* இரண்டு விஷயங்களை மறக்காமல் பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுங்கள் – எவரொருவரை சந்தித்தாலும் அவரிடம் உள்ள நல்லவற்றை மட்டும் எடுத்துக் கொண்டு தேவையற்றதை மறக்கவும், நம்மால் அவர்களுக்கு என்ன உதவி செய்ய முடியுமென்பதை மட்டும் நினைக்க வேண்டும் அதைவிடுத்து அவர்களிடமிருந்து எதையும் எதிர்பார்த்து உதவி செய்யக் கூடாதென்று கற்றுக் கொடுக்க வேண்டும். அதாவது
1. நல்லவற்றை எடுத்து கொண்டு தேவையற்றதை விட்டுவிடுதல்
2. நாம் உதவ வேண்டும் எந்த எதிர்பார்ப்புமின்றி.
* பிள்ளைகள் நம்மிடம் வந்து எனக்கு அந்த அன்க்ள் ( uncle ) பிடிக்கவில்லை என்று கூறினால் அவர் உங்களுக்கு தெரிந்தவராக இருந்தால் அந்த இடத்திலேயே அவரிடமுள்ள ஏதாவது ஒரு நல்ல குணத்தைப்பற்றி எடுத்துச் சொல்லுங்க குழந்தைகளுக்கு. இச்செயலால் அவர்கள் குழந்தைகளாக இருந்தாலும் சரி, அவர்கள் வளர்ந்து பெரரியவர்களான பிறகும் சரி யாரையும் பிடித்தவர்கள், பிடிக்காதவர்கள், நல்லவர்கள், கெட்டவர்கள் என்று பிரித்துரைக்க மாட்டார்கள். ஏனென்றால் நல்லதும் கெட்டதும் கலந்திருப்பவன் தான் சராசரி மனிதன் என்பதை குழந்தைகளுக்கு உணர வைக்க வேண்டும்.
* பிள்ளைகள் குரல் உயர்த்தி பேசுவதை தடை செய்யுங்கள் உங்களுக்கும் தான்.
* பொய் பேசுவதற்கு தடை விதியுங்கள் உங்களுக்கும் சேர்த்து.
* இரண்டு பெண்கள் பேசிக்கொண்டிருக்கையில் குழந்தைகளை அங்கே அமர அனுமதிக்காதீர்கள்.
* பிள்ளைகளை வளர்ப்பது எப்படி ஒரு பெற்றோரின் கடமை ஆகிறதோ அதேப்போல் பெற்றோர்களை அவர்களின் வயதான காலம் தொட்டு அவர்களின் மரணம் வரை காப்பது பிள்ளைகளின் கடமையாகும் என்பதை உணர்த்தும் கதைகளையும் நிஜங்களையும் பிள்ளைகளின் கண்முன்னே திரையிட வேண்டும்.

* பெற்றோர்கள் *
* இப்பங்குதான் பெரும் பங்குங்க. ஒரு கோயிலின் மூலகரகமென்றாலும் பெற்றோர்கள் தான். முச்சந்தியென்றாலும் பெற்றோர்கள் தான்ங்க. பெற்றோரின் பொருப்பு மிகவும் கடினமானது நாட்டை ஆளும் அரசனை விட என்பதை மறப்பது நன்றன்று.
* பிள்ளைகளை வளர்க்கும் போது அதாவது தன் பிள்ளைகளை வளர்ப்பது தமது கடமை என்று வளர்க்க வேண்டும் மற்றும் இவர்கள் வளர்ந்து நமக்கு இதை செய்ய வேண்டும் அதை செய்ய வேண்டுமென்று மனக்கோட்டை கட்டி வளர்ப்பது கடமையில் சேராது. ஆம் கடமை என்பது எதிர்பார்ப்பின்மை ஆகும். இவ்வாறு நாம் புரிந்து வைத்துக்கொண்டால் ஒருவேளை விதியின் விளையாட்டினால் தன் பிள்ளை தன்னை கவனிக்காது விடும் நிலை ஏற்படும் போது நம் மன நிலை பாதிக்கப்படாது. மனம் தான்ங்க முதலில் பாதுகாக்க வேண்டிய ஒன்று.
* விலங்குகள் மற்றும் ஊர்வன, பறப்பன என எல்லா வகையிலும் அந்த இனமே அழிந்து விடும் போலிருக்கு என வருத்தப்படுபவர்களில் நாம் எத்தனையோ பேர் இருக்கிறோம். ஆனால் மனித இனத்திலேயே எத்தனையோ குடும்பங்கள் சந்ததியின்றி அழிந்தே இருக்கிறது நம் போன்ற பெற்றோர்களால் என்பதை நம்மில் எத்தனைபேர் வருத்தப்பட்டிருக்கிறோம் அல்லது இவ்வாறு ஒன்று நடக்கிறது என்று சிந்தித்து தடுக்க முயற்சித்திருக்கிறோம்.நம் சந்ததியை வளர்க்க பெற்றோர்களாகிய நாம் ஒரு கோடிட்டு வழிகாட்டினால் போதும் அதற்காக திடமான பாலமே நம் பிள்ளைகள் போடுவார்கள் என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது பெற்றோர்களே. ஏனென்றால் அம்மா 8 அடி என்றால் பிள்ளை 16 அடி அல்லவா?
* 25 வயது வரை எல்லா வகை அன்பு, பாசம், நேசம், கஷ்டம், துக்கம், உழைப்பு கொட்டி வளர்த்த பிள்ளை ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி தோலுக்கு மேல் வளர்ந்த பிறகும் நாம் சொல்வதையெல்லாம் கேட்பார்கள் என்று மனக்கோட்டை கட்டிவிட கூடாது. ஏனென்றால் நீங்கள் காட்டாத சிலவற்றை மீடியாக்களும், சக நண்பர்களும், தவிர்க்க முடியாத சில சூழ்நிலைகளும் அன்பு என்ற மூன்றெழுத்தை அவர்களுக்கு காட்டிக்கொடுத்து எட்டாத சக்தியையும் கொடுக்கிறது. இந்த சக்திக்கு முன்னால் நம் போன்ற பெற்றோர்களின் பாசங்கள் வெறுமை தான். அதிலும் ஆண் பிள்ளையை பெற்றவர்கள் பரிதாபத்திற்குரியவர்கள். அதனால் நோய்நொடி நம்மை அண்டாமலும், வருடத்திற்கு ஒரு முறை உடல் பரிசோதனை செய்தும் , நம் வாழ் நாட்களுக்கு தேவையான அளவு பண சேமிப்பும் மற்றும் முடிந்த அளவிற்கு பொதுநல சேவையில் ஈடுபட்டும் இருந்தோமேயானால் நாம் நம் பிள்ளைகளுக்கு ஒரு பாரமாக இருக்கமாட்டோம் என்பதில் எந்த ஐய்யப்பாடுமில்லை நம்மவர்களே.
* எங்ஙனம் படிப்புரிமையை அவர்களின் கையில் கொடுத்தோமோ அங்ஙனமே அவர்களின் வாழ்க்கை துணையை தேர்ந்தெடுப்பதையும் அவர்களின் கையிலேயே கொடுத்து விடுவது பெற்றதின் முதல் பலன் இதுவாகவே இருக்கும் பெற்றவர்களுக்கு. ஆம் ஆனால் அங்கு ஒரு சில கண்டிப்புகளை போடுங்கள்.
1. உனக்கு ஒரு நிறந்தர பண வரவிற்கான தொழில்
2. ஆண் பிள்ளையாக இருந்தால் நீ தான் வரதட்சணை கொடுத்து அந்த பெண்ணை மணம் முடிக்க வேண்டும்.
3. இரண்டு வருடம் கழித்து திருமணம் அதுவரை நீ எங்களுடன் எங்களுக்கு ஒரு பிள்ளையாக வாழ வேண்டும்.
இக்காலகட்டத்தில் பெற்றோர்களாகிய நாம் நிறைய விட்டுக்கொடுக்கும் தன்மையை நம்மிடையே வளர்த்துக்கொள்ள வேண்டும். இங்ஙனம் செய்யும் போது கூட்டுக்குடும்பங்கள் உருவாவதற்கு வழிவகுக்குமென நினைக்கிறேன்.
* ஒரு சில பிள்ளைகள் சிறிது வித்தியாசமானவர்கள் பெருந்தன்மையுடன் கூறுவார்கள் என்னுடைய மற்றும் அவளுடைய பெற்றோர்கள் சம்மதிக்கும் வரை நாங்கள் திருமணம் செய்து கொள்ள மாட்டோமென்று. பெற்றோர்களாகிய நீங்கள் சம்மதம் கொடுங்கள் ஆனால் அவர்களின் வார்த்தைகளுக்கு நீங்களும் மயங்கி உங்கள் நிலையை மறந்து விடாதீர்கள். அவர்களின் பணிவுக்கு மதிப்புக்கொடுங்கள் அதேப்போல் அத்திருமணத்தை நேர்பாதையில் கொண்டும் செல்லுங்கள். அதிலும் மாற்று மதமாக இருந்து விட்டால் பாவம் அந்த பெற்றோர்கள் சம்மதத்திற்கு பிறகு. அதனால் எப்போதும் அனுசரித்து போக வேண்டியது அந்த மாப்பிள்ளையும் பெண்ணும் தான் அவர்களைப் பெற்றவர்களல்ல என்பதை அவர்களுக்கு உணர்த்திடுங்கள் சம்மதம் கொடுப்பதற்கு முன்பே.
* தாயும் பிள்ளையும் ஒன்றானாலும் வாயும் வயிறும் வேறுதான் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு பெரிய பிள்ளை ஆண் பிள்ளை அடுத்து இருப்பவர்கள் பெண் பிள்ளையாக இருந்தால் முதலில் நீங்கள் பெண் பிள்ளைக்கு தான் திருமணம் செய்ய நினைப்பீர்கள். ஆனால் இந்த பெண் பிள்ளைக்கு இப்போது தான் 18 வயது. உடனே நீங்கள் உங்கள் மகனின் மீதுள்ள நம்பிக்கையால் இப்பெண் பிள்ளைக்கு சேர்க்க வேண்டிய நகைகளுக்கு தாமதிக்காதீர்கள். உங்களுக்கு எத்தனை பிள்ளைகள் இருந்தாலும் அவர்களுக்கு செய்ய வேண்டிய நல்லது கெட்டது அணைத்தும் பெற்றோர்களாகிய உங்களின் பொருப்பு தான். இதற்காக வீட்டிற்கு வந்த மருமகளே கோபப்பட்டாளும் கவலைப்படாதீர்கள் பொருமையுடன் எடுத்துக் கூறுங்கள் இது பெற்றோர்களாகிய எங்களின் கடமை என்று.
* உங்களின் வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் மரணம் வேண்டுமென்று நினைக்காமலும், பெற்ற பிள்ளைகளுக்கு சாபம் கொடுக்காமலும் உறுதியான மனதிடத்துடன் உழைக்க கற்றுக் கொள்ளுங்கள். பிள்ளைகளுக்கு செய்யக்கூடிய கடமைகள் முடிந்தபிறகு கூட மனம் தளராது வாழ உங்களுக்கும் சேர்த்து வைத்து கொள்ள வேண்டும் உங்களின் மரணம் வரை இத் தருணம் தான் உங்களின் தன்னம்பிக்கை நிறைவுப் பெறும் தருணம்.
* பெற்றோர்களாகிய நாம் விட்டு கொடுத்து விட்டு கொடுத்து நிறைய இழக்கிறோம் பிள்ளைகளை வளர்வதற்கு. அவர்கள் வளர்ந்த பிறகும் எதையும் நாம் இழக்காமல் இருக்க தன்னம்பிக்கை என்ற ஊன்று கோலுடன் உங்களின் பொருளாதார சூழ்நிலையையும் உயர்த்தி கொள்ளுங்கள். அப்போது தான் நீங்கள் முதியோர் இல்லத்திற்கு பழம் கொடுக்க செல்பவராக இருப்பீர்கள். இல்லையேல் பழம் வாங்குபவர்களில் ஒருவராக அங்கே இருப்பீர்கள்.
* எது எப்படியோ எந்தவித எதிர்பார்ப்பின்றி பிள்ளைகளுக்கு செய்வது எனது கடமை மட்டுமே என்று செய்தோமேயானால் இறைவனின் அருள் என்றென்றும் உண்டு பெற்றோர்களுக்கு.

* வயதானவர்கள் *
* இத்தருணம் துணைத் தேவைப்படும் தருணம். தளர்ச்சி அடைந்த தருணம் என்ற மன பக்குவத்தை தனக்குள்ளே கொண்டு வருவது நலம் பயக்கும் நமக்கும் நம்மை சார்ந்தோருக்கும். நம் பிள்ளைகளுக்கு தான் ஒரு பாரம் என்று நினைக்க வேண்டாம் மற்றும் பாரத்தை கொடுக்கவும் நினைக்க வேண்டாம். அமைதியாக ஆன்மீகத்தில் அமர்வது நன்று.
*குழந்தைகளாக மாறிவிடும் பருவம்.இத்தருணத்தில் பிள்ளைகளின் கைகளில் உள்ளது இவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பது. வினை விதைத்தவன் வினை அறுப்பான், திணை விதைத்தவன் திணை அறுப்பான் என்பதை உணர்ந்த பிள்ளைகளாக இருப்பின் தன் பெற்றோர்களுக்கு திணை விதைப்பவர்களாக இருந்து அவர்களும் இப்பருவம் எட்டும்போது அவர்களின் பிள்ளைகளிடமிருந்து திணையையே அறுப்பார்கள் என்பது நிர்ணயிக்கப்பட்ட ஒன்றாகும்.

*மரணம் *
*இத்தருணம் என்பது நிலையான தன்னிறைவு கானும் தருணம். நாம் வாழ்ந்த காலத்தில் செய்த அத்துணை நற்செயல்களும் நம்மை வாழ்த்தும் தருணம். கண்ணீரின்றி நம் கண்களும் சிரித்திட ஒளிதரும் தருணம். நம்மிலுள்ள நாடி நரம்புகளெல்லாம் ஓய்வு பெற நன்றிக்கூறும் தருணம். நம் சுற்றம் சூழ விடைத்தர விடியா பொழுதிற்கு செல்லும் தருணம். இத்தருணத்தில் இந்நிலை எய்ய வேண்டுமெனில் நாம் வாழும் காலத்தில் நன்மைகளை கொண்டு கடமைகளாக கடப்பின் சுற்றம் கூறும், காலம் போற்றி வாழ்த்தும் புன்னியவான் , புன்னியவதி மறைந்து விட்டார் என.கல்லூரி பருவத்திற்கு பிறகு உள்ள திருமணம், குடும்பம், பிள்ளைகள், பெற்றோர்கள், வயதானவர்கள் கடைசியில் மரணம் வரை நானறிந்த வற்றிலிருந்து சிறிதளவு முன்னெச்சரிக்கை வழிமுறைகளை கொடுத்துள்ளேன். பெற்றவர்களுக்கும் பிள்ளைக்கும் மற்றும் பிள்ளைக்கும் பெற்றவர்களுக்கும் உள்ள உறவு முறையானது இரத்த பந்தமட்டுமல்லாமல் ஒருவருக்கொருவர் பாதுகாப்பளிப்பது கட்டாயக் கடமையாகும் என்பதை மறந்து விடாதீர்கள். நான் கூறியவற்றில் பிழைகளிருப்பின் உங்கள் மனதிற்குள் எடுத்துச் செல்லாதீர்கள். பிடித்திருப்பின் படித்ததை பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி.

One thought on “பெற்றோரின் பெருமை 10”

  1. வாழக்கையின் சார அம்சத்தை மிக விாிவாக எடுத்து கூறியுள்ளீா்கள் வாழ்த்துக்கள் பல, “கடமையை செய் பலனை எதிா் பாா்க்காதே” என்ற உங்களின் கொள்கை மிகவும் அருமை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three − 1 =