பெற்றோரின் பெருமை 7

மல்லிகையின் வாசத்தை எப்பொழுது எங்கு நுகர்ந்தாலும் அதன் வாசம் மட்டும் என்றும் புதுமையாகவே சலிக்காத ஒன்றாக இருக்கும். அதேப்போல் தான் பெற்றோர்களின் மனமும் மல்லிகையின் மணமும். எனக்கு தெரிந்த ஒரு அம்மா. அவருக்கு இரண்டு பிள்ளைகள் ஒரு பெண் பிள்ளை, ஒரு ஆண் பிள்ளை. பெரிய பிள்ளைதான் பெண் பிள்ளை. அவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உண்டு. அவருடைய கணவர் வெளிநாட்டில் வேலை செய்கிறார். ஆண் பிள்ளையோ படிப்பை முடித்து விட்டு நம் நாட்டிலேயே பணிபுரிகிறார். அந்த அம்மாவிற்கு கணவர் இல்லை. இருப்பினும் அந்த இரண்டு குழந்தைகளையும் கண்ணும் கருத்துமாக வளர்த்தவர் எனக் கூறினால் மிகையாகாது. திடீரென அந்த அம்மாவின் பெண் பிள்ளைக்கு உடல் நிலை சரியில்லை. வயிற்று பகுதியில் மிகுந்த வேதனை ஏற்பட்டதால் அவசர அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. அந்த அம்மாவும் தன் இரண்டாவது பிள்ளையான மகனும் தான் அந்த மகளை கவனித்து கொண்டிருந்தார்கள். ஏனென்றால் அந்த பெண்ணின் கணவர் வெளிநாட்டில் இருக்கிறார். அந்த அறுவைசிகிச்சையெல்லாம் முடிந்து ஒரு வாரம் கழிந்த பிறகு என் குடும்பத்துடன் மருத்துவமனைக்கு சென்றேன் நோயாளியின் நலன் விசாரிக்க. முதன் முதலாக அந்த அம்மாவை நான் நேரில் பார்க்கிறேன். சிறிது நேரத்தில் அறையை விட்டு வெளியே அந்த அம்மாவுடன் வந்தேன். அது வரை என்னிடம் சிரித்து பேசிக்கொண்டிருந்த அம்மா அறையை விட்டு வெளியில் வந்தவுடன் அவர் கண்களில் கண்ணீர் தேங்கியுள்ளதைக் கண்டேன். கண்டதும் என்னுடன் அணைத்து அழுது விடுங்கள் என்றேன். ” ஓ” என்று கத்தி அழுதார்கள். திடீரென என்னைவிட்டு விலகி சிரித்து பேச துவங்கினார். புலப்படாத நிகழ்வு மற்றும் எதிர் பாராத சூழ்நிலை பிறகு தான் தெரிந்தது அங்கே அந்த அம்மா கண்டது அவரின் மகனை என்று. தான் அழுவதை தன் மகன் அறிந்தால் அவனின் மனம் உடைந்து விடும் என்ற அச்சம் அந்த தாயிடம் இருந்ததை கண்டேன். பிறகு என் கண்களில் கண்ணீர் தேங்கியது. உடனே அவர்களிடம் விடைப்பெற்றுக் கொண்டு மருத்துவமனையினை விட்டு வெளியில் வந்து நான் ஓ என்று அழுதேன். அதைப் பார்த்த என் மகளும் கண் கலங்கினாள். நான் கண்ட அந்த அம்மாவின் மனதிடம் கொண்ட பாசத்திற்கு விடையோ விலையோ நிர்ணயிக்க முடியுமா? . அதனால்தான் நான் மல்லிகையின் வாசத்தோடு எல்லா பெற்றோர்களின் மனங்களையும் ஒப்பிடுகிறேன். ஏனென்றால் ஒவ்வொரு பெற்றோர்களின் வெளிப்பாடுகளும் ஒவ்வொரு விதம். எல்லாமே புதுமை மற்றும் சலிக்காத அன்பின் நிறைக்குடம். அப்பேற்பட்ட அன்பின் நிறைக்குடங்களாகிய பெற்றோர்களை எவ்வாறு நாம் பாதுகாத்து பெருமை படுத்துவது. ஒரு துளி சந்தர்ப்பம் எனக்கு தென்படுகிறது பெற்றோர்களை பெருமைப்படுத்த ஆம். நாம் ஒரு வாகனத்தில் அமர்ந்து பயனிக்கிறோம் அப்போது ஒரு வயதான அம்மாவை கண்டதும் நம் மனம் கூறும் நாம் எழுந்து அந்த வயதான அம்மாவிற்கு இடம் கொடுத்தால் என்ன என்று. இங்கே பாருங்கள் நமக்கு நல்ல மனது ஆனால் ஏன் நாம் அந்த “வயதான “என்ற வார்த்தையை உபயோகிக்க வேண்டும். இப்படி நினைத்தால் என்ன ” அந்த அம்மாவிற்கு இடம் கொடுத்தால் என்ன என்று”. எல்லா சிறு பிள்ளைகளையும் பார்த்து குழந்தைகள் என்கிறோம். ஏன் எல்லா வயதானவர்களையும் பெற்றோர்களாக நினைப்பதில்லை நாம். அவ்வாறு நினைத்தால் நம் சொத்தையா பங்கு போட்டு கொடுக்க போகிறோம். இல்லை மன ஆறுதலை பரிமாறப்போகிறோம் அவ்வளவு தான். ஒரு நாள் என்பது இருப்பது நான்கு மணிநேரம் அதில் எத்தனை மணி நேரம் நம் பெற்றோர்களுக்காக ஒதுக்கி இருக்கிறோம். அல்லது நம் பெற்றோர்களை நினைவு கூறுகிறோம். தினந்தோறும் எத்தனையோ பெற்றோர்களை சந்திப்போம் நம்மெதிரில். அவர்களிடம் ஒரு சிறிய புன்னகை செய்யும் போது நம் பெற்றோர்கள் நம்மைவிட்டு வெகுதூரத்தில் இருந்தாலும் நம் பெற்றோர்களிடம் புன்னகைத்தது போன்று மன ஆறுதல் மற்றும் மகிழ்ச்சி நமக்கும் அவர்களுக்கும் கிடைக்குமல்லவா? இவ்வாறு புது புது மன நிறைவு தரும் முறைகளை கையாளுவுமேயானால் என்றுமே நம் வாழ்வில் ஒளிதரும் பண்டிகை தான் பெற்றோர்களுடன். மற்றுமொன்று தோணுகிறது முதியோர் இல்லம் என்பதை விட பெற்றோர்கள் இல்லம் என்றிருப்பின் அந்த இல்லத்தின் வழியாக செல்லும் போதும் அவ்வில்லத்தைப்பற்றி பேச கேட்கும் போதும் ஒவ்வொருவரின் மனதிலும் ஒரு வகையான வலி ஏற்படும். அப்போது ஒவ்வொரு இளைஞனும் சங்கிலித்தொடராக கைக்கோர்த்து நிற்பார்கள் பெற்றோர்களை ( முதியோர் ) பெற்றோர்கள் இல்லத்திற்கு அனுப்பாமல் இருக்க. பேரப்பிள்ளைகள் எதிர்த்து நிற்பார்கள் தன் தாய் தந்தையிடம் – பாட்டியையோ தாதாவையோ (முதியோர் ) பெற்றோர்கள் இல்லத்திற்கு அனுப்ப கூடாது என்று. இந்நிலை வருமேயானால் அதுவும் வாழையடி வாழையாக வளரும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. இம்மாறுதலை விரைவில் காண எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × one =