பெண்மை 8

பெண்கள் எவ்வாறு எளிதில் வசப்படுபவர்களோ அதேப்போலதான் ஆண்களும் எளிதில் அழகுக்கு அடிமையாபவர்கள். மற்றும் பரிதாபத்துக்குரிய விஷயம் அவர்களால் உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவது என்பது கடினமானது. அதனால் தான் அத்தருணத்தில் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதையே மறந்து விடுவார்கள். பிறகு பழியை பெண்கள் மீது திணித்து விட்டு மறைந்தும், மறைத்தும் விடுவார்கள். அதனால் தான் அத்தருணத்தில் பெண்களாகிய நம்மிடம் – நம் பெண்மையை எவ்வாறு பேணிகாப்பது மற்றும் எவ்வாறு அதே ஆண்கள் மதிக்கும் அளவிற்கு நம்மை வைத்துக் கொள்வது என்ற தெளிந்த நுன்னறிவோடு வாழ்வதே நலம் தரும். இதற்கு ஒரு உதாரணம் : 18 வருடத்திற்கு முன்பு நான் ஒரு தனியார் மருத்துவமனையில் செவிலியாக பணிபுரிந்தேன். ஸ்பெஷல் நர்ஸ் அதாவது ஒரு நோயாளிக்கு ஒரு நர்ஸ். எனக்கு சிறு குழந்தைகள் இருந்ததால் இரவு பணிக்கே செல்வேன். ஏனென்றால் பகலில் என் குழந்தைகளைக் கவனித்து கொள்வதற்காக. அன்று எனக்கு கொடுக்கப்பட்ட நோயாளியின் பெயர் பிந்து, வயது 28. இலங்கையிலிருந்து வந்த ஒரு பெண். அறுவை சிகிச்சைக்கு பிறகு நினைவிழந்த நிலையில் ( coma stage ) அதாவது அந்த பெண்ணின் உடல் உறுப்புகளில் எந்தவித அசைவும் இல்லை. அப்பெண்ணின் மூலை மட்டும் பழுதடையவில்லை இருந்தாலும் அதிக நாட்களுக்கு உயிருடன் இருக்க மாட்டார் என்று மருத்துவர்கள் அப்பெண்ணின் கணவரிடம் தெரிவித்தார்கள். ஆனால் அப்பெண்ணின் கணவன் இரவு முழுவதும் அந்த நோயாளிப் பெண்ணின் உள்ளங்கால் முதல் கொண்டு முத்தமிட்டு கொண்டும், கவுண்டமணி செந்தில் காமடி போட்டு அப்பெண்ணின் காதருகில் வைத்துக் கொண்டும், பொது மறையாக கூறபடுபவைகளில் ஒரு நூலை வாசித்து கொண்டுமிருப்பார். என் மனதில் அளவுக்கடந்த சந்தோஷம். தன் மனைவி நினைவிழந்த நிலையில் இருந்தும் அவர் பிழைக்க மாட்டார் எனத்தெரிந்துங்கூட அவளின் கணவனிடமிருந்த தன்னம்பிக்கையைக் கண்டு வியந்தேன். அதைப்பற்றி என் கணவரிடமும் பகிர்ந்து கொண்டதுண்டு. ஒரு 15 நாட்களுக்கு பிறகு ஒரு நாள் இரவு பனிரெண்டு மணிக்கு அந்த பெண்ணின் மூக்கு வழியாக ஒரு டியூப் இருக்கும் அதன் வழியாக நீர் ஆகாரம் ( liquid food ) கொடுக்க வேண்டும். அந்த பெண்ணின் கட்டிலுக்கும் அந்த ஆணின் கட்டிலுக்கும் இடைப்பட்ட இடத்தில் நின்று தான் கொடுக்க முடியும். அன்றும் அதேப்போல் கொடுக்க முயன்ற போது அந்த ஆண் என் கைகளை பிடிக்க அருகில் நெருங்கினான். நான் வெடுக்கென்று என் கைகளை நீக்கிக்கொண்டு அருகிலிருந்த பொதுமறை நூலை அவன் கைகளில் திணித்து விட்டு அறையிலிருந்து வெளியே சென்று விட்டேன். யாரிடமும் இதைப்பற்றி கூறவும் மனமில்லை, யாரிடமும் பகிர்ந்து கொள்ளவும் மனம் நாடவில்லை ஒரு வகையான வலி மட்டும் இருந்தது. அந்த வலியும் ஓ என்று அழுதால் மட்டுமே தீரும். ஒரு மணி நேரம் கழித்து என் நோயாளியின் நினைவு வந்தது. உணவு கொடுக்க வில்லையே பாவம். அந்த நினைவிழந்த நிலையில் உள்ள நோயாளி எனக்கு எந்தவித தீங்கும் செய்யவில்லையே என்று நினைத்து வேகமாக அறைக்குள் நுழைந்தேன். அந்த மனிதன் என்னெதிரில் நின்று தன் இரு கைகளை கூப்பி என்னை மன்னித்து விடும்மா என்றான். அவன் இரு கண்களும் வீங்கி இருந்தது. நான் எந்த பதிலும் கூறவில்லை. ஏனென்றால் நிறைந்த வெறுப்பு மட்டுமே இருந்தது. ஆண்கள் எல்லோரும் இவ்வளவு தானா? என்ற எண்ணம் என் மனதை அழுத்தி நின்றது. காலை 7 மணி ஆகிவிட்டது அது நான் பணி முடித்து வீடு செல்லும் நேரம். அவன் என்னை பார்த்து கேட்டான் சிஸ்டர் என்னை மன்னித்து விடுங்கள். உங்கள் மீது எப்போதும் ஒரு தனிப்பட்ட மரியாதை இருந்தது. ஆனால் இன்று எனக்கு என்னவாயிற்றென்று தெரியவில்லை. இதற்காக பணிக்கு வருவதை நிறுத்தி விடாதீர்கள் என கூறினான். அப்போது தான் அந்த நோயாளிப் பெண்ணின் முகத்தை பார்த்தபடி அவனிடம் கூறினேன் உன் மீதும் நல்ல மதிப்பு வைத்திருந்தேன். ஒரு பெண் உயிர் போகும் நிலையில் மரணப்படுக்கையில் மற்றும் பிழைக்கமாட்டாள் என்று தெரிந்தும் கூட அளவுக்கு அதிகமான பாசத்தை அவள் மீது கொட்டிக்கொண்டிருக்கிறாய் என நினைத்தேன் மற்றும் அவள் கொடுத்து வைக்காதவள் அதனால் தான் அவளால் உன் பாசத்தை அடைய முடியவில்லை என்று நினைத்தேன். ஆனால் இன்று தான் எனக்கு புரிந்தது அவளின் பாசத்தை அடைய நீ தான் கொடுத்து வைக்கவில்லை என்று மற்றும் நான் இரு குழந்தைகளுக்கு அம்மா. உனக்கும் அம்மா ஸ்தானம் என்றேன். அந்த பெண்ணின் இரு கண்களிலிருந்தும் கண்ணீர் வழிவதைக்கண்டேன். அக் கண்ணீரைக்காட்டி அவனிடம் கேட்டேன் இக் கண்ணீருக்கு என்ன பதில் கூறப்போகிறாயென்று. கோமா ஸ்டேஜ் -ல் இருந்த பெண்ணிற்குக்கூட தன் கணவனை விட்டு கொடுக்க முடியாத நிலையை கண்டும், பெண்ணென்பவள் எப்போதும் அழமட்டுமே பிறந்தவளா என்ற கேள்வியும் என் மனதில் ஒரு பாரமாகவே இருந்து வந்தது. இத்தனை வருடங்கள் கழித்து அந்த பாரத்தை இறக்கிவிட்டு என் இறைவனுக்கு நன்றி செலுத்துகின்றேன்.அதனால் கூறுகிறேன் ஒரு பெண் திருமணமானவள் என்று தெரிந்த பின்பும் ஒரு ஆண் உன்னிடம் அவன் விருப்பத்தை தெரிவித்தால் அவனைவிட்டு விலகி சென்று விடு. அதனால் கிடைக்கும் சொற்ப சந்தோஷமும் வேண்டாம் பின்விளைவால் வரும் தீராத துக்கமும் வேண்டாம். நீங்கள் ஒரு நல்ல பணியில் இருந்தாலும் அதை விட்டும், அவனை விட்டும் விலகி விடு. வேலைக்கு செல்லாத பெண்ணாக இருந்தால் குடி இருக்கும் இடத்தையே மாற்றி விடு. ஏனென்றால் எல்லா நேரமும் நமக்கு சாதகமாக இருக்கும் என்று கூறமுடியாது. நமக்கு கிடைக்காத அன்பு ஒருவனிடமிருந்து கிடைக்கிறதே என்று ஒரு பெண் நினைத்து விட்டால் அதை தடுக்க யாராலும் முடியாது. அத்தருணம் தான் ஆண்களுக்கு சாதகமாக அமைந்து விடுகிறது. எல்லோரும் கூறுவார்கள் காவல் நிலையம் உள்ளது, கணவன் உள்ளான், பெற்றோர்கள் இருக்கிறார்கள், குழந்தைகள் இருக்கிறதென்று. எல்லாமே மறைந்துவிடும் மறந்துவிடும் ஒரு பெண் மனதளவில் வசப்பட்டுவிட்டால்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 4 =