அனுபவம் 13

நாமறிந்த ஒரு உண்மை படித்தவர்களும் படிக்காதவர்களும் சமமாக மாட்டார்கள் என்பது. அதனால் தான் படிப்பின் முக்கியத்துவம் வெளிப்பட்டு மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டு எல்லோருக்கும் கல்வி என்ற வழிமுறைகள் இலகுவானது. இவ்வாறு தோன்றிய இலகு வழியில் கல்விக்கு பிறகு உண்டாகும் சிக்கல்கள் தான் படிப்பிற்கேற்ற வேலையின்மை, பொருளாதார குறைபாடு, குடும்ப சூழல் மற்றும் சுற்றுபுற சூழல். இதிலிருந்து நாம் எவ்வாறு வெளிவருவது என்பது தான் இன்றைய காலகட்டத்தில் உள்ள மிகவும் சங்கடமான நிலை என நினைக்கின்றேன். இதில் ஒரு சிலர் என்ன செய்கிறார்கள் என்றால் தன் படிப்பிற்கேற்ற வேலை என்னவாக இருந்தாலும் பரவாயில்லை என்று நினைத்து மாத வருமானத்திற்கு கீழ் குடும்ப நிலையையும், தன் சுற்றத்தின் நிலையையும் சுதாரித்துக் கொண்டு தன் நிலையிலிருந்து ஒரு படி மேலே செல்லாமல் தன் வாழ்கையில் ஒரு முற்றுப்புள்ளியும் வைத்து விடுகிறார்கள். அவ்வாறல்ல படிப்பிற்கேற்ற வேலை இல்லையென்றாலும் கிடைத்த வேலையை பார்த்துக்கொண்டே வேறு ஏதாவது ஒன்றை சுயத்தொழிலாக தேர்ந்தெடுத்து உழைத்தால் அதற்கான ஊதியமும், நம்முடைய முயற்சியும் திருவினை ஆக்கும். மற்றும் ஒரு சிலர் என்ன செய்கிறார்கள் என்றால் ஆம் நம்ம நாட்டில் என் படிப்பிற்கான வேலை கிடைக்கவில்லை என்று பணம் சிலவு செய்து ஏஜென்சி மூலமாக வெளிநாடு செல்வார்கள். அதுவும் இரண்டு வருடம் அல்லது ஐந்து வருடத்திற்கான காண்ட்ராக்டுடன். ஆனால் அங்கேயும் நாம் எதிர்பார்த்த வேலை கிடைக்குமா என்றால் இல்லை. இருந்தாலும் பணம் சிலவு செய்து கிடைத்த வேலை அதை எப்படி விட முடியும் அதுவும் காண்ட்ராக்ட் வேற கையெழுத்திட்டுள்ளோம். அதனால் பல்லை கடித்துக் கொண்டு அயல் நாட்டில் அயல்நாட்டு மொழியில் திட்டு வாங்கிக் கொண்டு உழைப்போம். மாதமானா சம்பள பணத்தையும் வீட்டிற்கு அனுப்பி வைப்போம். இரண்டு வருடமோ அல்லது ஐந்து வருடமோ கழித்து இப்போது நம் நாட்டிற்கு செல்கிறோம் நம் குடும்பத்தை பார்க்கபோகிறோம் மறுபடியும் இங்கு வரக்கூடாது என்ற பெருமிதத்துடன் விமானமும் ஏறுவோம். நம் நாட்டில் கால் வைத்த உடன் தன் கண்களிலிருந்து கண்ணீர் துளிரும். ஆனால் அந்த கண்ணீருக்கு அர்த்தம் கிடையாது அதற்கு தீர்வும் கிடையாது. ஏனென்றால் வீட்டிற்கு வந்த பிறகு தான் தெரியும் வீட்டில் உள்ள பெண்கள் பணத்தை சேகரித்து வைக்கவில்லை என்று. இத்தனை வருடம் தனியாக வாழ்ந்த அவனால் தன் மனைவியிடம் வார்த்தையை கூட உயர்த்தி பேச முடியாமல் மன அழுத்தத்திற்கு ஆளாகி, மாற்று முடிவெடுக்க வழியும் திறனும் இல்லாமல் மறுபடியும் விமானம் ஏறுவான் அயல் நாட்டிற்கு. இப்பேற்பட்டவர்களுக்கு நான் கூறுவது அயல்நாட்டு வாழ்க்கை நிரந்தரமுமில்லை சரியான முடிவுமல்ல. தன் இளம் வயதை அயல் நாட்டில் தன்னந்தனியாக கழித்து விட்டு தன் முதுமையில் நம் நாட்டில் வந்து குடும்பத்துடன் என்ன சந்தோஷத்தை தான் நம்மால் காண முடியும். அப்படியே பணம் நிறைந்திருந்தாலும் நம்மால் இழந்த சந்தர்பத்தையும் சந்தோஷத்தையும் மீண்டும் பெறமுடியுமா? நாம் அயல் நாட்டில் பட்ட மற்றும் கண்ட கஷ்டங்களை தான் நம் குடும்பத்தில் உள்ளவர்களால் உணரமுடியுமா? அதனால் தான் இப்பேற்பட்டவர்களுக்கு நான் கூற விரும்புவது நீங்கள் வெளிநாடு செல்வதற்காக எப்படியிருந்தாலும் குறைந்த பட்சம் ஒன்றரை லட்சம் சிலவு செய்வீர்கள். அந்த பணத்தை வைத்து ஏதாவது ஒரு சிறு தொழில் ஆரம்பிக்கலாம் அல்லவா? அதிலிருந்து வரும் வருமானத்தினால் தன் தொழிலை விரிவுப்படுத்தலாம் அல்லவா? முன்பெல்லாம் நான் கூற கேட்டிருக்கிறேன் அரசாங்க உத்தியோகம் தான் உசத்தி என்று. அவ்வாறல்ல நம்முடைய சொந்த உழைப்பினால் நம்மால் ஒரு தொழிலை ஏற்படுத்தி அதன் மூலமாக பத்து பேருக்கேனும் வேலை வாய்ப்பு கொடுத்து அந்த பத்து குடும்பங்கள் சந்தோஷத்துடன் வாழும் போது நமக்கு கிடைக்கும் ஆத்ம திருப்தி அரசாங்க வேலையாக இருந்தாலும் சரி, அயல் நாட்டு வேலையாக இருந்தாலும் சரி, அல்லது பெற்றோர்கள் அளவுக்கு மீறி சேர்த்த சொத்தாக இருந்தாலும் சரி எதிலும் கிடைக்காது. தொழில் நுட்பமும், தன்னம்பிக்கையும், தளராத உழைப்பும், தானென்ற பெருமிதமில்லாமலும், மனித நேயத்துடன் இறையச்சம் கொண்டு உழைப்பின் கல்வியின் தரம் மென்மேலும் மேம்படும் என்பதில் தீர்க்கமான உறுதி நிலை உண்டு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − three =