அனுபவம் 12

பெரும்பாலான ஆண்கள் மற்றும் பெண்களின் குறைபாடுகளின் கூக்குரல் என்ன தெரியுமா? என் சொந்தங்களுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டுமென்றால் என் மனைவிக்கு தெரியாமல் தான் செய்ய வேண்டிருக்கிறது இல்லையேல் வீட்டில் பிரச்சனை தான் அதிகமாகும் என்கிறார்கள் இரு தரப்பிலும். இவற்றிற்கு ஒரே தீர்வு தான். உதவும் குணமானது பெண்களின் சொத்து. இந்த குணத்தை யாருக்காகவும் எதற்காகவும் தன்னிடமிருந்து குறைத்துக் கொள்ளவோ அல்லது மாற்றிக் கொள்ளவோக் கூடாது. நிறைய மாமனிதர்கள் வாழ்ந்து மறைந்த மண்ணில் பிறந்தவர்கள் நாமல்லவா? அவர்களுக்கு ஈடாக நம்மால் மனித நேயத்துடன் வாழ இயலவில்லை என்றாலும் குறைந்த பட்சமாவது வாழ முயற்சிக்க வேண்டும். அப்போது கணவர்கள் உதவ முன்வரவில்லையென்றாலும் பெண்கள் நீங்கள் தான் அவர்களை ஊக்குவிக்க வேண்டும் மற்றும் உங்களுடைய பிள்ளைகளுக்கு சிறு வயதிலேயே உதவும் பக்குவத்தை உணவுடன் சேர்த்து ஊட்ட வேண்டும். ஒரு பெண் கர்பமாக இருக்கும் போதே அம்மா, அப்பா, தாதா, பாட்டி மற்றும் அவர்களின் அப்பா அம்மாவின் ஒரு சில குணங்கள் அந்தக் குழந்தை கருவாக இருக்கும் போதே கிடைத்து விடுகிறது. அதனால் தான் ஒரு பெண் தான் கர்பமானால் எப்படியெல்லாம் நம் குழந்தையை வளர்க்க வேண்டுமென்று நினைப்பதற்கு முன்னால் தன்னிடமும் தன் கணவரிடமும் உள்ள தேவையற்ற குணத்தை மாற்றிக்கொள்ள நினைப்பது நல்லதொரு அஸ்திவாரம் கொடுத்ததிற்கு சமம் பிறக்க போகும் குழந்தைக்கு. ஒரு குடும்பத்திற்கு தூண்கள் போன்றது சொந்தங்களை ஆதரிப்பதே ஆகும். ஒரு சிலர் கூறக்கேட்டிருக்கிறேன் இப்போது என்னிடம் பணமிருக்கிறது அப்போது என்னிடம் இருந்திருந்தால் என் அப்பாவின் சொத்தை விற்றிருக்க மாட்டேன். இன்னும் சிலர் கூற கேட்டிருக்கிறேன் என் பரம்பரை சொத்தை என் அண்ணாவிற்கு விற்று விட்டேன் என் குடும்ப கஷ்ட்டத்திற்காக வேண்டி. மற்றும் ஒரு சிலர் கூற கேட்டிருக்கிறேன் என் மகள் திருமணத்திற்காக வேண்டி நான் உழைத்து சம்பாதித்த சொத்தை குறைந்த விலைக்கு விற்றேன் என் சொந்தங்கள் யாரும் உதவ முன் வரவில்லை என்று. ஒரு கணவன் மனைவியின் பிரிவு என்பது அவரிருவர்களுக்குள்ள பிரச்சனையால், மாமியார் கொடுமையால், வரதட்சணை கொடுமையால் மற்றும் சில தவிர்க்க முடியாத காரணத்தால். ஆனால் எந்த கணவன் மனைவியாவது இந்த சொந்தத்திற்கு உதவவில்லை அந்த சொந்தத்திற்கு உதவவில்லை என்று பிரிந்திருக்கிறார்களா? அப்படியே இருந்தாலும் குறைந்த அளவில் தான் இருக்குமென நினைக்கின்றேன். ஒரு குடும்பத்தில் அப்பா அம்மா, அக்கா, அண்ணன், தம்பி, தங்கை எல்லோரும் ஒன்றாக அமர்ந்து உணவு உட்கொள்கிறோம் சிறு வயதிலிருந்து எல்லோருக்கும் திருமணமாகும் வரை. இதற்கிடையில் எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் ஒன்றாக பிணைந்து வாழ்கிறோம். ஆனால் தனக்கென ஒரு குடும்பம் வந்தவுடன் ஏன் நம்மோடு சிறு வயதிலிருந்து பிணைந்து வாழ்ந்தவர்களை மறக்க வேண்டும். அல்லது அவர்களுக்கு ஒரு கஷ்டம் வரும் போது ஏன் தள்ளி நின்று வேடிக்கை பார்க்க வேண்டும். இதே நிலை நாளைக்கு நமக்கு வந்தால் என்ன செய்வது. இன்று நாம் என் உடன் பிறந்தவருக்கு உதவினால் தானே நாளைக்கு எனக்கு உதவுவான் என நினைக்க வேண்டாமா? அல்லது நானே என் உடன் பிறந்தவனுக்கு உதவவில்லை என்றால் யார் தான் உதவுவார் என நினைக்க வேண்டாமா? அல்லது இவன் என் உடன் பிறந்தவன் நான் தான் முதலில் உதவ வேண்டுமென்று முன்னுரிமையோடு உதவ வேண்டாமா? இவை அனைத்திற்கும் பெண்களாகிய நாம் பக்கத்துணையாக இருந்து நம் வீட்டு சொந்தமாக இருந்தாலும் சரி, வாழச் சென்ற வீட்டின் சொந்தமாக இருந்தாலும் சரி தன் கணவனை பக்குவத்துடன் ஊக்குவிக்க வேண்டியது ஒவ்வொரு பெண்ணின் கடமையாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 4 =