அனுபவம் 11

அனுபவ விதைகளை ஊன்றி வரும் நான் இன்று என் அனுபவத்தை விதைக்க முயல்கிறேன். இது வரை கேள்வி பட்டதில் பெரும்பாலோர் கூறும் பதில்கள் ‘பெற்றோர்கள் தயவு செய்து பிள்ளைகளை அவர்கள் தேர்ந்தெடுக்கும் வேலைக்கான படிப்பிற்கு படிக்க வையுங்கள். பிள்ளைகளுக்கு படிப்புரிமையை அவர்கள் கையில் கொடுத்து விடுங்கள் மற்றும் பெற்றோர்களின் ஆசைகளை அவர்கள் மீது திணிக்காதீர்கள் என்று. எந்த ஒரு அப்பா அம்மாவும் தன் பிள்ளை நல்ல நிலைமையில் வாழவேண்டும் என்று தான் நினைப்பார்கள். அப்படிப்பட்ட பெற்றோர் எங்ஙனம் தங்களுடைய ஆசைகளை பிள்ளைகளின் மீது திணிப்பார்கள். இங்கு பிள்ளைகள் புரிந்து கொள்ளும் விதங்களும் பெற்றோர்கள் அதை முறைப்படுத்தும் விதங்களும் தான் முரண்பாடாக இருக்கிறது. பெற்றோர்கள் தான் தன் பிள்ளைகளுக்கு முதல் மருத்துவர் மற்றும் முதல் ஆசிரியர். அப்படியிருக்க தன் பிள்ளைகளின் மன நிலையை அறிந்து அதற்கு உகந்தார் போல் குடும்ப சூழலை மாற்றி இலகுவாக பக்குவப்படுத்தி சென்றால் முடிவு திணித்தலாக இருக்காது. ஆம் எனக்கு இரண்டு பிள்ளைகள் ஒரு ஆண், ஒரு பெண். என் ஆசை எப்படியாவது என் பிள்ளைகளை ஒரு நல்ல மருத்துவராக்க வேண்டுமென்பது. என் மகனிடம் நல்ல அறிவு தென்பட்டது மற்றும் தான் ஏதாவது ஒன்று சாதிக்க வேண்டுமென்ற அறிவு கூர்மையும் இருந்தது. ஆனால் எந்த ஒரு மருத்துவமனைக்குள் நுழைவதற்கும் பயம். உதாரணமாக எனக்கு அறுவை சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் உள்நோயாளியாக இருந்த போது என் மகள் வயது 10 என்னுடன் தங்கி இருந்தாள் ஆனால் என் மகனோ நான் இருந்த அறைக்கு வெளியில் நின்றபடியே அம்மா எப்படி இருக்கீங்க என்று கேட்டார். ஆனால் அன்று என் மகனின் முகத்தில் நான் கண்டது – அவனால் என் வலியை பார்க்கும் அளவிற்கு மன தைரியம் இல்லை என்பதை உணர்ந்தேன். ஆனால் என் மகளிடம் குறிப்பிடும் அளவிற்கு படிப்பில் கவனம் இருக்காது ஆனால் அவளின் 10 வயதிலேயே என்னுடன் தங்கி எனக்கு உதவிய விதத்தில் இருந்த மன தைரியத்தை ஊக்குவிக்க முயன்றேன். எப்போதும் என் மகள் கூறியது அம்மா நான் ஒரு நல்ல ஆசிரியையாக LKG & UKG பிள்ளைகளுக்கு பாடம் எடுக்க வேண்டும் என்பாள். ஆனால் என் ஆசையோ என் மகளை ஒரு நல்ல மருத்துவராக ஆக்கவேண்டுமென்பது. அதற்காக அவள் மீது என் ஆசையை திணிக்க விருப்பமில்லை. நான் ஒரு செவிலியாக மருத்துவமனையில் பணிப்புரிந்ததால் நோயாளிகளின் நிலைகளையும் அதற்கு எங்ஙனம் நாம் உதவுவது என்பதையும் அடிக்கடி எடுத்துரைத்தேன் இலகுவாக. நாட்கள் செல்லச்செல்ல அவளின் 10 ம் வகுப்பு தேர்வு முடிவும் வந்தது. நல்ல மதிப்பெண்கள் பெற்றிருந்தாள். பிறகு என் மகளே என்னிடம் கூறினாள் அம்மா நான் டாக்டராகவே விரும்புகிறேன் என்று. மிகவும் சந்தோஷமாக இருந்தது. பழம் வழுக்கி பாலில் விழுந்தது போல். இவ்வளவு ஊக்கமடைந்த என் பிள்ளைக்கு பணம் ஒரு தடையாக இருக்கக்கூடாது என பணமும் சேர்க்க துவங்கினேன். NEET exam ல் இடம் கிடைக்கவில்லை இருப்பினும் என் நகைகள் அனைத்தையும் விற்றேன். வெளிநாட்டிற்கு மருத்துவ கல்லூரியில் பயில அனுப்பினேன். நல்ல முறையில் பயின்றும் வருகிறாள். பிள்ளைகளை ஊக்குவிக்கும் போது பக்குவத்தோடு ஊக்குவிக்க வேண்டும் மற்றும் அதற்கான பணவசதியையும் சுதாரித்து வைத்துக்கொண்டால் எந்தப் பெற்றோரின் ஆசையும் நிராசையாகவோ அல்லது பிள்ளைகளின் மீது திணித்தலாகவோ மாறாது என்பது என்னுடைய பொதுப்படையான கருத்து. ஒரு சில பெற்றோர்கள் பிள்ளைகளை நல்ல முறைகளில் ஊக்குவிப்பார்கள். ஆனால் பணத்தேவையென்று வரும்போது ஒரு வேளை சேகரிக்க இயலா நிலை ஏற்படும் போது அப்பிள்ளைகளின் மன நிலை உடைந்து விடும். இந்த சூழ்நிலையை ஆரம்பத்திலேயே தவிர்ப்பது பெற்றோர்களின் கடமை ஆகும். அதேப்போல் பிள்ளைகளும் தான் மருத்துவராக வேண்டுமென்று இரவு பகல் பாராமல் கஷ்டப்பட்டு படித்து 12 ம் வகுப்பில் நல்ல மதிப்பெண்களும் வாங்கிவிட்டு NEET exam ல் fail ஆகி விட்டோம் என்று மனமுடைந்து போகக்கூடாது. உங்களிடம் படிப்புத்திறன் உண்டு.உங்களின் திறனால் 12 ம் வகுப்பில் படித்துக்கொண்டே neet exam ற்கும் படித்தீர்கள். மறுபடியும் மனம் தளராமல் neet exam ற்காக மட்டும் முயன்று படித்தால் உங்களால் neet exam ல் தேர்ச்சி பெறுவதோடு அடுத்த பிள்ளைகளுக்கும் முன் உதாரணமாக நீங்கள் இருப்பதோடு பெற்றோர்களின் பண சங்கடத்தையும் உங்களால் தீர்க்க முடியும்.முயற்சி திருவினை ஆக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − fourteen =