அனுபவம் 6

கதைகளை கேட்டு கேட்டு பரிதாபப்படுவதைவிட சிறிதளவேனும் சிந்தித்து செயல்பட முயல்வோம் வாருங்கள். என்னுடன்                        வேலைப்பார்த்துக்கொண்டிருந்த ஒரு பெண் அவளுடைய கணவன் வேலைக்கு போவதில்லை மற்றும் நன்றாக குடித்துவிட்டு நிறைய சண்டை போட்டுக்கிட்டே இருப்பாராம். அந்த பெண் நல்ல அழகுள்ளவள் மற்றும் அந்த பெண்ணிற்கு ஒரு ஆண் பிள்ளை உண்டு வயது 5.அந்த பெண் எப்பொழுது பார்த்தாலும் அழுது கொண்டே இருக்கும் ஏனென்றால் ஒரு பக்கம் கணவரிடமிருந்து மன உளைச்சல் மறு பக்கம் கடன் தொல்லை. இப்படியே வாழ்க்கை ஓட்டிக்கொண்டிருந்தாள். ஒரு நாள் திடீரென நிறைய நகைகள் அணிந்து வந்தாள் வேலைக்கு. அடுத்த மாதம் எனக்கு திருமணம்.என்னை திருமணம் முடிப்பவர் நான் குடியிருக்கும் வீட்டின் ஓனர் மற்றும் நகைக்கடையும் வைத்துள்ளார் என்றாள். அதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை இதில் எனக்கு உடன்பாடு இல்லாததால் நான் சற்று தொலைவிலேயே நின்றுவிட்டேன். ஆனால் ஒரு நாள் ஞாயிற்றுக்கிழமை நானும் அந்த பெண்ணும் மட்டும் வேலையில் இருந்ததால் அந்த பெண் பேசத்துவங்கினால். நானும் என்னை திருமணம் முடிக்கவிருப்பவரும் பொருட்கள் வாங்க ‘டி நகர் ‘சென்றிருந்தோம். எல்லாம் வாங்கி முடித்த பிறகு ஒரு ஓட்டலில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தோம்.அப்போது போன் அவருக்கு வந்தது அதில் அவர் மனைவி கூறினாள் நேரமாகிவிட்டது சாப்பாடு ஆறுகிறது சீக்கிரம் வாங்க சாப்பிடலாம். எங்க இரண்டு பேருக்கும் அப்படி ஒரு சிரிப்பு வந்தது ஏன்னா அவள் ஒரு பைத்தியக்காரி அதனால்தான் நாம் இங்கு சந்தோஷமாக இருக்கிறோம் அவளுக்கு நான் சாப்பிட அங்கு வேண்டுமாம் என்று அவர் முணுமுணுத்தார் என்று சிரித்துக்கொண்டே என்னிடம் கூறினாள். என் மனம் வலித்தது உடனே அந்த பெண்ணிடம் கேட்டேன் ஏன் உன்னை திருமணம் முடிப்பவரின் மனைவிக்கு ஏதாவது பிரச்சினையா என்று. அதற்கு அந்த பெண் கூறினாள் ஆம் கல்யாணம் ஆகி 5 வருடம் முடிந்தும் ஒரு குழந்தையை பெற்றுக்கொடுக்க முடியல பிறகு ஆம்பிளைக்கு கோவம் வராதா என்று கோவத்துடன் பதிலளித்தாள்.என் மனம் மேலும் வலித்தது மற்றும் கனத்தது. அன்று வீட்டிற்கு சென்று என் பிள்ளைகளிடம் விளையாடி கொண்டிருந்த போதும் என் மனம் அதை மறக்க மறுத்தது. மறுபடியும் ஒரு நாள் நாங்கள் இருவர் மட்டுமே வேலையில் இருந்தோம். அப்போது என்னிடம் பேச துவங்கியதும் அவளின் முகத்தில் இருந்த சந்தோஷமானது அவளால் கட்டுப்போட முடியாத அளவிற்கு இருந்தது . இன்று என்ன ஆயிற்று தெரியுமா?

அந்த பொம்பள அம்மியில் வைத்து எதையோ அறைத்துக்கொண்டே அவரிடம் கேட்டாளாம் இது என்னது தெரியுமா அரளி விதை நான் இதை குடிச்சிட்டு சாகப்போறேன்னு அழுதுகிட்டே – அதற்கு அவர் கூறினாராம் சாகனும்ன்னா ஏன் என்னிடம் சொல்கிறாய். சொல்லாமல் தானே குடிக்கணும். செய்வதை சீக்கிரமாக செய்து முடி என்று. அந்த அலட்சிய போக்கின் வலி என்னால் உணர முடிந்தது. ஆனால் அவர்களுக்கு அந்த பெண்ணின் இறப்பும் துடிப்பும் சாதகமாக அமைந்தது. இதன் மூலமாக நாம் அறிவது ஒரு பெண்ணிற்கு ஒரு பெண்ணே பாவம் செய்வதோடு தண்டிக்கவும் செய்கிறார்கள் ஒவ்வொரு பெண்ணும் மறு பெண்ணிற்கு சகோதரி அல்லவா? நம் உடன் பிறந்த சகோதரிக்கு பாதகத்தை ஏற்படுத்த நினைக்கலாமா? ஒரு பெண் தன் கணவன் சரியில்லை என்று மறுமணம் முடிப்பதும் ஒரு ஆண் தன் மனைவி சரியில்லை அல்லது ஒரு குழந்தை இல்லை என்று மறுமணம் முடிப்பதும் அந்த காலக்கட்டத்திற்கு வேண்டுமானால் சரியாக இருக்கலாம். பிறகு வரும் சந்ததிகளுக்கு அது பாரமாகவே அமையும். நாம் அறிந்தும் அறியாமலும் பிறருக்கு செய்த மற்றும் செய்யும் பாவமானது சுவற்றில் அடித்த பந்து போல் நமக்கே திரும்பி வரும். அப்போது அந்த பழைய காலக்கட்டத்தின் வலியை விட மிகவும் கனத்ததாக இருக்கும். அப்போது நம்மால் விலகி ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது மற்றும் வேறு வழியை தேடவும் முடியாது. அதனால் பெண்கள் தயவுக்கூர்ந்து ஒரு பிரச்சினை வரும் போது அதை விட்டு ஓடி விடப்பார்க்காதீர்கள் அதனுள் போராடி தீர்வு காண முயலுங்கள். பெண்களுக்கும் பகுத்தறிவு உண்டு என உண்மைப்படுத்தி மன வலிமையோடு வாழுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × three =