அனுபவம் 5

கணவன் மனைவி எப்படி வாழ வேண்டுமென்பதற்கு ஒரு அனுபவ கதையை இருபது வருடங்களுக்கு பிறகு உங்களிடம் பகிர்ந்துக்கொள்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். நான் அப்பொழுது ஒரு அரசு மருத்துவமனையில் செவிலியாக பணிபுரிந்தேன். எப்பொழுதும் நான் பணியை துவங்கிய உடன் வார்டில் ஒரு சுற்று சென்று வருவேன். எப்போது சென்றாலும் என் கண்களில் படும் ஏதாவது ஒருவருக்கு என்னுடைய உணவை கொடுப்பேன் இது எனது வழக்கம். அன்றும் அதேப்போல் சுற்று முடித்து வந்தேன். டாக்டர் என்னிடம் வந்து sister இங்கே பாருங்க அந்த நோயாளியின் சொந்தக்காரனுக்கு பைத்தியம் போல் இருக்கு என்று கோவத்துடன் கூறினார். என்ன ஆயிற்று டாக்டர் என்று வினவினேன். அதற்கு அவர் கூறினார் மூன்று முறைக்கு மேல் அந்த நோயாளிப் பெண்ணிற்கு மூக்கு வழியாக டியூப் ( tube) போட்டோம் உணவை கொடுப்பதற்காக. ஆனால் அந்த வயதான ஆள் போட்டுட்டு திரும்பி பார்பதற்குள் எடுத்து விடுகிறார் என்றார். ஓகே டாக்டர் நான் அந்த பெரியவரிடம் பேசி எடுத்துரைக்கிறேன் எனக்கூறி அந்த நோயாளி இருக்குமிடத்திற்கு சென்றேன். என் கண்களிலிருந்து கண்ணீர் தானாக வந்தது.

அந்த பெரியவர் வயதான மெலிந்த உடலமைப்பை கொண்ட மனைவியை தன் மடியில் வைத்து பழைய அதாவது தண்ணீரில் ஊறவைத்த சாதத்தை ஒவ்வொரு பருக்கையாக தன் விரல்களில் எடுத்து அதை நசுக்கி பிறகு அதை அந்த அம்மாவின் வாயில் வைப்பதை பார்த்தேன். உடனே அந்த டாக்டரை அழைத்தேன். அவரும் அந்த இடத்திற்கு வந்தார். ஆனால் அது எதுவுமே அந்த பெரியவருக்குத் தெரியவில்லை. அந்த அளவுக்கு ஈடுபாட்டுடன் தன் மனைவிக்கு உணவை கொடுத்து கொண்டிருக்கிறார். அப்போது நான் அந்த டாக்டரை பார்த்து கேட்டேன் டாக்டர் இவரையா பைத்தியம் என்று சொன்னீங்க என்றேன். உடனே டாக்டர் கூறினார் sister எப்படியாவது ஒரு bed ready பண்ணிக்கொடுங்க இந்த அம்மாவுக்கு என்றார். ஒரு காலி bed இந்த முனையிலிருந்து அடுத்த முனையில் உள்ளது.நான் அந்த பெரியவரிடம் கூறினேன் அப்பா கொஞ்சம் நேரம் பொருத்துக்குங்க வார்டு பாய் வந்ததும் உங்க மனைவிக்கு அதோ அந்த bed கொடுக்கிறேன் என்றேன். அதற்கு அந்த பெரியவர் கூறினார் அம்மா இங்கதானம்மா நானே கொண்டுவரேம்மா , நேற்றைக்கு எக்ஸ்ரே எடுப்பதற்கு நான் தூக்கிக்கிட்டு தாம்மா சென்றேன் என்று சொல்லிக்கொண்டே தன் மனைவியை இரு கைகளினால் அள்ளி சென்ற காட்சி இன்றும் என் மனதில் ஆழமாய் பதிந்துள்ளது. இரண்டு மணி நேரத்திற்கு பிறகு அந்த அம்மா இறந்து விட்டார். என் மனதில் நினைத்தேன் கொஞ்சம் பணம் இந்த பெரியவருக்குக் கொடுத்தால் உதவியாக இருக்குமே என்று ஆனால் அந்த பெரியவர் சட்டென்று என்னருகில் வந்து – அம்மா என் மனைவியின் உடலை இங்குள்ள மருத்துவக்கல்லூரிக்கு எடுத்துக்குவாங்கலாம்மா என்றார். எனக்கு பதில் கூற வாயின்றி வாயடைத்து நின்றேன். உடனே அந்த டாக்டரிடம் கூறினேன். பிறகு அந்த பெரியவரிடம் ஒரு கையெழுத்து தேவைப்பட்டது அவரிடம் கேட்டோம். அந்த பெரியவர் கையெழுத்திட்டார் மிகவும் அழகாக ஆங்கிலத்தில் தன் கைப்பட எழுதி கையெழுத்திட்டார் திடுக்கிட்டேன். உருவமோ ரோட்டோரத்தில் அமர்ந்திருப்பவர் போன்று ஆனால் இங்கோ எதிர் மறையாக உடனே நான் கேட்டேன் அப்பா உங்களுக்கு பிள்ளைகள் இருக்கிறார்களா? ஆம் இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள் இருவரும் அமெரிக்காவில் டாக்டராக பணிபுரிகிறார்கள் என்று கூறினார். மனமுடைந்து விட்டது. எனக்கு மட்டுமல்ல அந்த டாக்டருக்கும் கூட. அந்த டாக்டர் அவரிடம் கேட்டார். ஏன் இவங்களை மருத்துவக்கல்லூரி க்கு கொடுக்கிறீர்கள் என்று. அதற்கு அந்த பெரியவர் கூறினார் எங்களுக்காக உழைத்த இந்த உடல் அழிய வேண்டாம்மா. என் மனைவியின் உடலை மருத்துவ கல்லூரிக்கு கொடுத்தால் அதனால் பல பிள்ளைகள் பயனடைவார்கள் என்றார். வார்த்தைகள் இருப்பின் பகிர்ந்து கொள்ளுங்கள் இல்லையென்றால் நல்ல மனித உள்ளங்கள் இவ்வுலகில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள் என்று பெருமிதப்படுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 + 3 =