அனுபவம் 4

நான் அடுத்தடுத்து கூறுவது பெண்கள் மிகவும் மென்மையானவர்கள் அவர்கள் மனதளவிலும் உடலளவிலும் பலவீனமானவர்கள். ஒரு பெண்ணிற்கு திருமணம் பேசி முடித்து நிச்சயதார்த்தமென்று ஒன்று முடிந்த உடனேயே கனவுக்காண ஆரம்பித்து விடுகிறாள். இதற்கு முன் வரை வாழ்ந்த வாழ்க்கையில் தாய், தந்தை ,அண்ணா, தம்பி, அக்கா அல்லது தங்கை என்ற சொந்தங்களோடு வாழ்ந்த அவள் அத்தனையையும் மறந்து தனக்கு வரப்போகும் கணவன் எப்படிப்பட்டவன் என்று தெரியாமலேயே அவளுக்குள் சில எண்ணங்களை விதைத்து விடுகிறாள். திருமணம் முடிந்த அடுத்த சில நாட்களிலேயே தனக்கு பிறக்க போகும் குழந்தையை எப்படியெல்லாம் வளர்க்க வேண்டும் என்று தன்னைத்தானே பக்குவப்படுத்திக் கொள்கிறாள். எந்த குணமெல்லாம் தன் கணவனிடமும் அல்லது தன்னிடமும் தேவை அற்றதாக இருக்கிறதோ அதை தன் பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுக்க மறக்கிறாள். மழலைப்பேச்சு ஆரம்பிக்கும் போதே மண்ணில் பிறந்த முதல் மகாராணி தானே என நினைக்கிறாள். தவழும் போதே அவன் தரணி முழுவதும் தாவி வரவேண்டும் என நினைக்கிறாள். தூக்கத்தை மறக்கிறாள் துக்கத்தை துளைக்கிறாள்.கணவன் சரியில்லை என்றாலும் வாழ்கைப்பட்ட குடும்பம் சரியில்லை என்றாலும் தான் பெற்ற இக் குழந்தையையே தன் உலகமென்று நினைத்து தன் தைரியத்தை தூணாக்குகின்றாள். தன் பிள்ளை காலூன்றி நின்ற உடனேயே கல்லூரிக்கு நாள் குறிக்கிறாள்.தன் பிள்ளைக்கு பசி என்று ஒன்று தெரியக்கூடாதென்று நினைத்து மருந்துப் போல் நேரம் பார்த்து உணவளிப்பாள்.

தன் வாழ்க்கையில் பிள்ளைகள் மட்டும் தான் என நினைத்து வாழும் இவளின் மனதில் ஒரு சில பிள்ளைகள் கொடுக்கும் பதில்கள் என்னவாக இருக்குமென்று நினைக்கிறீர்கள். ஆம் பள்ளி முடிந்து
கல்லூரிக்குச் செல்லும் போது நான் என்னப்படிக்கனும் என்று எனக்கு தெரியும் உங்களுடைய கனவை எங்களிடம் திணிக்காதீர்கள் என்பார்கள் “ஊம்” என்று கூறி அவளும் தலை அசைப்பாள். கல்லூரி படிப்பு முடிந்ததும் தன் பிள்ளைக்கு பெண் பார்க்க துடிப்பாள் ஆனால் பிள்ளையோ கூறுவான் ‘அம்மா எனக்கு யாரை கேட்டு பெண் பார்க்க போறீங்க’.நானும் ஒரு பெண்ணும் ஒருவரை ஒருவர் நேசிக்கிறோம் அதனால் எங்களுக்கே திருமணமுடிக்க முயற்சி செய்யுங்கள் என்று முன்னுரையைக் கொடுப்பான்.இடிந்து போன அம்மாவோ இருட்டறையில் அமராமல் இங்குள்ள கோயிலுக்கு போகலாம் அங்குள்ள கோயிலுக்கு போகலாம் நல்லதே நடக்க வேண்டும் தன் பிள்ளைக்கு என்று நடைப்பிணமாக நடுரோட்டில் கூட வாய் விட்டு பேசிக்கொண்டு நடப்பாள் ஆனால் தானே ஒரு கோயிலுக்கு சமம் என்று நினைக்க மறப்பாள்.

அவள் பட்ட கஷ்டங்களை கண்ட அதே சமுதாயம் அவளைப் பார்த்து கூறும் புரியாத முட்டாளாக இருக்கிறேயே அவன் விரும்பப்படும் பிள்ளையையே கல்யாணம் பண்ணி வச்சா என்ன? அவனென்ன ஓடி போயா கல்யாணம் பண்ணிக்கிட்டான். உன் மேல் மதிப்பு வச்சியிருக்கிறதாலதான் உன்னிடம் வந்து உரிமையோடு கேட்கின்றான். ஆனால் அந்த சமுதாயத்திற்கு தெரியாதோ என்னவோ திருமணம் என்பது மூன்று மணி நேர பொழுதுப்போக்குக்கான திரைப்படமோ அல்லது கலைநிகழ்ச்சியோ அல்ல. அது ஒரு சந்ததியின் தொடர்ச்சி மற்றும் ஒரு வாரிசுயிலிருந்து ஒரு வாரிசு மற்றும் அடுத்து ஒரு வாரிசு என்று தொடர்ந்து வளரும் தொடர்கதை அல்லவா? அம்மி மிதித்து அருந்ததி பார்த்து முடித்த திருமணங்கள் கூட இருக்குமிடமே தெரியாமல் போயிருக்கிறது.நாள் பார்த்து, நட்சத்திரம் பார்த்து, உயர்ந்த நிலையில் உள்ளவரிடம் ஜோததிடம் பார்த்து முடித்த திருமணமும் களைந்து போயிருக்கிறது. நீ இன்றி நானில்லை நானின்றி நீ இல்லை என சாகத்துணிர்தவர்களின் திருமணங்களும் உடைந்திருக்கின்றது. ஆனால் எல்லாவற்றையும் பார்த்து பார்த்து செய்த தன்னலமற்ற தியாகத்தின் பொற்களஞ்சியமான ஒரு அம்மாவால் ஒரு பெண்ணை உனக்கு மணமுடித்து வைக்க மாட்டாளா என்று அந்த சமுதாயம் பகுத்தறிவு இருந்தும் பக்குவப்படாத பிள்ளையை பார்த்து கேட்காது. அதே அந்த அம்மாவிடம் சமுதாயம் கேட்கும் போது கேள்வி என்னவாக இருந்தாலும் தலை குனிந்து அமைதி காக்கும். ஆனால் அந்த பிள்ளையிடம் சமுதாயம் கேள்வி கேட்டால் என் அம்மாவிற்கே நான் பதில் கூறவில்லை நீர் யார் என்று வார்த்தையால் மிதித்துச்செல்வான் இது அனுபவங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 1 =